முதல் வாசகம்
பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 3:21-30
- 21
இப்பொழுதோ கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளது; திருச்சட்டமும் இறைவாக்குகளும் இதற்குச் சான்று பகர்கின்றன.
- 22
இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்; நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார். அவர் வேறுபாடு காட்டுவது இல்லை.
- 23
ஏனெனில், எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்.
- 24
ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின் மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர்.
- 25
இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார். அவரிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவே அவ்வாறு செய்தார். கடவுள் கடந்த காலத்தில் மனிதர் செய்த பாவங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறையை அவர் காட்டினார்.
- 26
இக்காலத்தில் தமது நீதியைக் கடவுள் பொறுமையோடு காட்டி வருகிறார். ஆம், அவர் நீதியுள்ளவர். இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி வருகிறார்.
- 27
அப்படியிருக்க, பெருமை பாராட்ட இடமேது? இடமில்லை. எந்த அடிப்படையில் பெருமைபாராட்ட இடமில்லை? செயல்களின் அடிப்படையிலா? இல்லை; நம்பிக்கையின் அடிப்படையில்தான்.
- 28
ஏனெனில் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுவின்மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் எனக் கருதுகிறோம்.
- 29
கடவுள் யூதருக்கு மட்டுமா கடவுள்? பிற இனத்தாருக்கும் அவர் கடவுள் அல்லவா? ஆம், பிற இனத்தாருக்கும் அவரே கடவுள்.
- 30
ஏனெனில் கடவுள் ஒருவரே. விருத்தசேதனம் பெற்றவர்களாயினும் விருத்தசேதனம் பெறாதவர்களாயினும், இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் யாவரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.