Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

DAILY MASS

Today’s
Readings

வியாழன், 30 அக்டோபர், 2025

பொதுக்காலம்

← Previous day
Next day →

முதல் வாசகம்

பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:31b-39

  1. 31

    இதற்குமேல் நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?

  2. 32

    தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ?

  3. 33

    கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே.

  4. 34

    அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!

  5. 35

    கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?

  6. 36

    "உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகிறோம், வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளாகக் கருதப்படுகிறோம்"என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!

  7. 37

    ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம்.

  8. 38

    ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ,

  9. 39

    உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.

வாசக எழுத்துக்குறி ஒரு வசனத்தின் பகுதியைக் குறிக்கும். இங்கே முழு வசனம் காட்டப்படுகிறது.

தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல்கள் 109:21-22, 26-27, 30-31

  1. 21

    ஆனால், என் தலைவராகிய கடவுளே! உமது பெயரை முன்னிட்டு என் சார்பாகச் செயல்படும்! உமது பேரன்பின் இனிமைபொருட்டு என்னை மீட்டருளும்!

  2. 22

    நானோ எளியவன்; வறியவன்; என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது.

  3. 26

    ஆண்டவரே! என் கடவுளே! எனக்கு உதவியருளும்! உமது பேரன்பிற்கேற்ப மீட்டருளும்!

  4. 27

    இது உம் ஆற்றலால் நிகழ்ந்தது என அவர்கள் அறியட்டும்! ஆண்டவரே! இதைச் செய்தவர் நீரே என அவர்கள் உணரட்டும்.

  5. 30

    என் நாவினால் ஆண்டவரைப் பெரிதும் போற்றிடுவேன்; பெரும் கூட்டத்திடையே அவரைப் புகழ்ந்திடுவேன்.

  6. 31

    ஏனெனில், வறியோரின் வலப்பக்கம் அவர் நிற்கின்றார்; தண்டனைத்; தீர்ப்பிடுவோரிடமிருந்து அவர்களது உயிரைக் காக்க நிற்கின்றார்.

தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.

நற்செய்தி

லூக்கா நற்செய்தி 13:31-35

  1. 31

    அந்நேரத்தில் பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து,"இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்லவேண்டும் என்றிருக்கிறான்"என்று கூறினார்.

  2. 32

    அதற்கு அவர் கூறியது;"இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என்பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்.

  3. 33

    இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாக வேண்டும். ஏனெனில், இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!

  4. 34

    "எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்; உனக்கு விருப்பமில்லையே!

  5. 35

    இதோ, உங்கள் இறை இல்லம் கைவிடப்படும்."ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்"என நீங்கள் கூறும் நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.