முதல் வாசகம்
பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 16:3-9, 16, 22-27
- 3
கிறிஸ்து இயேசுவுக்காக என்னோடு சேர்ந்து உழைக்கின்ற பிரிஸ்காவுக்கும் அக்கிலாவுக்கும் என் வாழ்த்து.
- 4
அவர்கள் என் உயிரைக் காக்கத் தலைகொடுக்கவும் முன்வந்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மட்டும் அல்ல, பிற இனத்துத் திருச்சபைகள் அனைத்துமே நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன.
- 5
அவர்கள் வீட்டில் கூடும் திருச்சபைக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். என் அன்பார்ந்த எப்பைனத்துக்கும் வாழ்த்துக் கூறுங்கள். ஆசியாவில் கிறிஸ்துவை முதன் முதல் ஏற்றுக் கொண்டவர் இவரே.
- 6
உங்களுக்காக பாடுபட்; டு உழைத்த மரியாவுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள்.
- 7
என் உறவினர்களும் உடன் கைதிகளுமான அந்திரோனிக்கு, யூனியா ஆகியவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்; திருத்தூதர்களுள் இவர்கள் பெயர்பெற்றவர்கள்; இவர்கள் எனக்குமுன் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.
- 8
ஆண்டவருக்கு உரியவரான என் அன்பார்ந்த அம்பிலியாத்துக்கு வாழ்த்துக்கள்.
- 9
கிறிஸ்துவுக்காக உழைக்கும் என் உடன் உழைப்பாளரான உர்பானுக்கும் என் அன்பார்ந்த ஸ்தாக்கிக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.
- 16
தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் எல்லாச் சபைகளும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றன.
- 22
இந்தத் திருமுகத்தை எழுதிக் கொடுத்த தெர்த்தியுவாகிய நான் ஆண்டவருக்கு உரியவன் என்னும் முறையில் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறேன்.
- 23
நான் தங்குவதற்கும் சபையினர் அனைவரும் ஒன்று கூடுவதற்கும் தம் வீட்டில் இடமளிக்கிற காயு உங்களுக்கு வாழ்த்துச் சொல்லுகிறார். நகரத்தின் பொருளாளரான எரஸ்தும் நம் சகோதரனாகிய குவர்த்தும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.
- 25
இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
- 26
இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர்.
- 27
ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.