முதல் வாசகம்
சாலமோனின் ஞானம் 6:1-11
- 1
மன்னர்களே, நான் சொல்வதற்குச் செவிசாய்த்துப் புரிந்துகொள்ளுங்கள்; உலகின் கடையெல்லைவரை நீதி வழங்குவோரே, கற்றுக்கொள்ளுங்கள்.
- 2
திரளான மக்களை ஆள்வோரே, பல மக்களினங்களைப் பற்றிப் பெருமை பாராட்டுவோரே, எனக்குச் செவிசாயுங்கள்.
- 3
ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது; உன்னத இறைவனிடமிருந்தே உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது. அவரே உங்கள் செயல்களைச் சோதித்தறிபவர்; உங்கள் திட்டங்களை ஆராய்பவரும் அவரே.
- 4
அவரது அரசின் பணியாளர்களாய் இருந்தும், நீங்கள் நேர்மையுடன் தீர்ப்பு வழங்கவில்லை; திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை; கடவுளின் திருவுளப்படி நடக்கவில்லை.
- 5
கொடுமையாகவும் விரைவாகவும் அவர் உங்கள்மேல் வருவார்; உயர் நிலையில் உள்ளவர்களுக்குக் கடும் தீர்ப்பு வழங்குவார்.
- 6
எளியோர்க்கு இரக்கங்காட்டி அவர்களைப் பொறுத்தருள்வார்; வலியோரை வன்மையாகத் தண்டிப்பார்.
- 7
அனைத்திற்கும் ஆண்டவர் யாருக்கும் அஞ்சி நடுங்க மாட்டார்; உயர்ந்தோர்க்கென்று தனி மதிப்பு அளிக்கமாட்டார். ஏனெனில் பெரியோரையம் சிறியோரையம் படைத்தவர் அவரே; எல்லாரும் ஒன்றென எண்ணிக் காப்பவரும் அவரே.
- 8
அவர் வலியோரிடம் கண்டிப்பான கணக்குக் கேட்பார்.
- 9
எனவே, மன்னர்களே, நீங்கள் ஞானத்தைக் கற்றுக் கொள்ளவும், நெறிபிறழாது நடக்கவும், உங்களுக்கு நான் கூறுகிறேன்;
- 10
தூய்மையானவற்றைத் தூய்மையாய்க் கடைப்பிடிப்போர் தூயோர் ஆவர்; தூய்மையானவற்றைக் கற்றுக்கொண்டார் தங்கள் செயல்களை முறைப்படுத்த வழி காண்பர்.
- 11
எனவே என் சொற்கள்மீது நாட்டங் கொள்ளுங்கள்; ஏக்கங் கொள்ளுங்கள். நீங்கள் அவற்றால் நற்பயிற்சி பெறுவீர்கள்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.