முதல் வாசகம்
தானியேல் 1:1-6, 8-20
- 1
யூதா அரசன் யோயாக்கிமின் மூன்றாம் ஆட்சியாண்டில் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் எருசலேமுக்கு வந்து முற்றுகையிட்டான்.
- 2
தலைவராகிய ஆண்டவர் யூதா அரசனாகிய யோயாக்கிமையும் கடவுளுடைய கோவிலின் கலன்கள் சிலவற்றையும் அவனிடம் கையளித்தார். அவனும் அவற்றைச் சீனார் நாட்டிலிருந்த தன் தெய்வத்தின் கோவிலுக்கு எடுத்துச் சென்று அவற்றைத் தன் தெய்வத்திற்குரிய கருவூலத்தில் சேர்த்தான்.
- 3
அப்பொழுது, அரசன் தன் அரண்மனை அலுவலரின் தலைவனாகிய அஸ்பெனாசுக்கு, அரசகுலத்தையும் உயர் குடியையும் சார்ந்த இஸ்ரயேலர் சிலரைக் கொண்டுவருமாறு கட்டளையிட்டான்.
- 4
அக்கட்டளைப்படி அவர்கள் உடல் ஊனமற்ற, அழகுமிக்க, எல்லா ஞானத்திலும் தேர்ச்சி பெற்ற, அறிவிலும் உணர்விலும் கல்வியிலும் சிறந்த, அரசனின் அரண்மனையில் பணியாற்றும் திறமை பெற்ற இளைஞர்களாய் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் கல்;; தேய மொழியை எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ளவேண்டும்.
- 5
அரசன் தான் உண்டுவந்த சிறப்புணவிலும், பருகி வந்த திராட்சை இரசத்திலும் நாள்; தோறும் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தான். இவ்வாறு மூன்றாண்டுகள் பயிற்சி அளித்தபின், இறுதியில் அவர்களை அரசன் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தவேண்டும் என்று ஆணையிட்டான்.
- 6
இப்படித் தேர்ந்ததெடுக்கப்பட்டவர்களுள் யூதா குலத்தைச் சார்ந்த தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா என்பவர்களும் இருந்தார்கள்.
- 8
அரசனது சிறப்புணவினாலும், அவன் பருகிவந்த திராட்சை இரசத்தினாலும் தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது என்று தானியேல் தம் உள்ளத்தில் உறுதி செய்து கொண்டார்; அவ்வாறே தாம் தீட்டுப்படாதிருக்க அலுவலர் தலைவனிடம் அனுமதி கேட்டார்.
- 9
அலுவலர் தலைவன் தானியேலுக்குப் பரிவும் இரக்கமும் காட்டுமாறு கடவுள் அருள்கூர்ந்தார்.
- 10
அலுவலர் தலைவன் தானியேலை நோக்கி,"உங்களுக்கு உணவும் பானமும் ஏற்பாடு செய்திருக்கும் அரசனாகிய என் தலைவருக்கு நான் அஞ்சுகிறேன். ஏனெனில் உங்களையொத்த வயதினரை விட நீங்கள் களை குன்றியிருப்பதை அரசன் கண்டால் என் தலையே போய்விடும்; நீங்கள்தான் அதற்குக் காரணமாவீர்கள்"என்றான்.
- 11
தானியேல், அனனியா, மிசாவேல் அசரியா ஆகியவர்களுக்கென அலுவலர் தலைவனால் நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரிடம் தானியேல் கூறியது;
- 12
"ஐயா! தயை கூர்ந்து பத்து நாள் உம் ஊழியர்களாகிய எங்களைச் சோதித்துப் பாரும். எங்களுக்கு உண்பதற்கு மரக்கறிகளையும், குடிப்பதற்குத் தண்ணீரையும் மட்டுமே தாரும்.
- 13
அதற்குப் பிறகு, எங்களது தோற்றத்தையும் அரசனது சிறப்புணவை உண்ணும் மற்ற இளைஞர்களின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப்பாரும்; அதன்பின் உமக்குத் தோன்றியபடி உம்முடைய பணியாளர்களாகிய எங்களுக்குச் செய்தருளும்"என்றார்.
- 14
அவனும் இக்காரியத்தில் அவர்களுக்கு இணங்கி அவர்களைப் பத்து நாள் சோதித்துப்பார்த்தான்.
- 15
பத்து நாள்கள் ஆயின. அரசனது சிறப்புணவை உண்டுவந்த இளைஞர்கள் அனைவரையும் விட அவர்களது தோற்றம் மிகக் களையுள்ளதாயும் உடற்கட்டு மிகச் செழுமையுள்ளதாயும் காணப்பட்டது.
- 16
ஆதலால் மேற்பார்வையாளன் அவர்கள் உண்ணவேண்டிய சிறப்புணவுக்கும் பருகவேண்டிய திராட்சை இரசத்திற்கும் பதிலாக மரக்கறி உணவையே அவர்களுக்குக் கொடுத்து வந்தான்.
- 17
கடவுள் இந்த நான்கு இளைஞர்களுக்கும் அறிவையும் அனைத்து இலக்கியத்தில் தேர்ச்சியையும் ஞானத்தையும் அருளினார். சிறப்பாக, தானியேல் எல்லாக் காட்சிகளையும் கனவுகளையும் உய்த்துணரும் ஆற்றல் பெற்றிருந்தார்.
- 18
அரசன் தன் முன்னிலைக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டுமென்று குறித்த நாள் வந்தது. அலுவலர் தலைவனும் அவர்களை நெபுகத்னேசர் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினான்.
- 19
அரசன் அவர்களோடு உரையாடலானான்; அப்பொழுது அவர்கள் அனைவருள்ளும் தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை; எனவே அவர்கள் அரசன் முன்னிலையில் பணிபுரியலாயினர்.
- 20
ஞானம், விவேகம் சார்ந்தவற்றில் அரசன் அவர்களோடு கலந்துரையாடினான். அப்பொழுது அவனது அரசில் இருந்த எல்லா மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாய் இருந்ததைக் கண்டறிந்தான்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.