முதல் வாசகம்
எசாயா 30:19-21, 23-26
- 19
சீயோன் வாழ் மக்களே, எருசலேமில் குடியிருப்போரே, நீங்கள் இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்; அவர் உங்கள்மேல் திண்ணமாய் அருள்கூர்வார். நீங்கள் கூப்பிடும் குரலுக்குச் செவி சாய்த்து உங்களுக்கு மறுமொழி அளிப்பார்.
- 20
என் தலைவராகிய உங்கள் போதகர் உங்களுக்கு துன்பமெனும் அப்பத்தையும் ஒடுக்குதலெனும் நீரையும் கொடுத்திருந்தாலும், இனித்; தம்மை மறைத்துக்கொள்ள மாட்டார்; உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள்.
- 21
நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும்"இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்"என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்.
- 23
நீங்கள் நிலத்தில் விதைத்துள்ள விதைமீது ஆண்டவர் மழை பொழிவார்; நிலத்தின் விளைவான உணவு செழுமையாகவும் மிகுதியாகவும் இருக்கும்; அந்நாளில் உன் மந்தை பரந்த மேய்ச்சல் வெளியில் மேயும்.
- 24
முறத்தாலும் சுளகாலும் தூற்றப்பட்டுச் சுவையூட்டப்பட்ட தீனியை நிலத்தை உழும் காளைகளும் கழுதைகளும் தின்னும்.
- 25
கோட்டைகள் இடிந்து விழுகின்ற மிகப்பெரும் அழிவுநாளில் வானளாவிய மலைகள் அனைத்தின் மேலும் உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மேலும் கால்வாய்களும் நீரோடைகளும் தோன்றும்.
- 26
ஆண்டவர் தம் மக்களின் முறிவுகளைக் கட்டி, தாம் அடித்து ஏற்படுத்திய காயங்களைக் குணமாக்கும் நாளில், நிலவின் ஒளி கதிரவன் ஒளிபோலாகும்; கதிரவன் ஒளி ஏழு பகல்களின் ஒளி ஒன்று திரண்டாற்போல ஏழு மடங்காகும்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.