முதல் வாசகம்
யோவான் எழுதிய முதல் திருமுகம் 2:22-28
- 22
இயேசு"மெசியா"அல்ல என்று மறுப்போரைத் தவிர வேறு யார் பொய்யர்? தந்தையையும் மகனையும் மறுப்போர்தாம் எதிர்க் கிறிஸ்துகள்.
- 23
மகனை மறுதலிப்போர் தந்தையை ஏற்றுக்கொள்வதில்லை; மகனை ஏற்று அறிக்கையிடுவோர் தந்தையையும் ஏற்றுக்கொள்கின்றனர்.
- 24
தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்; தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருந்தால் நீங்கள் மகனுடனும் தந்தையுடனும் இணைந்திருப்பீர்கள்.
- 25
அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அவ்வாக்குறுதி நிலைவாழ்வு பற்றியதாகும்.
- 26
உங்களை ஏமாற்றுகிறவர்களை மனத்தில் கொண்டு இவற்றை உங்களுக்கு எழுதியுள்ளேன்.
- 27
நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள் பொழிவு உங்களுள் நிலைத்திருக்கிறது. அதனால் உங்களுக்கு எவரும் கற்பிக்க வேண்டிய தேவையில்லை. மாறாக, நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவால் அனைத்தையும் கற்றுக்கொள்கிறீர்கள். அவ்வருள்பொழிவு உண்மையானது; பொய்யானது அல்ல. நீங்கள் கற்றுக்கொண்டதற்கேற்ப அவரோடு இணைந்து வாழுங்கள்.
- 28
ஆகவே, பிள்ளைகளே, அவர் தோன்றும்போது நாம் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கவும் அவருடைய வருகையின்போது வெட்கி விலகாதிருக்கவும் அவரோடு இணைந்து வாழுங்கள்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.