முதல் வாசகம்
2 சாமுவேல் 1:1-4, 11-12, 19, 23-27
- 1
சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்து திரும்புகையில் தாவீது சிக்லாஇல் இரண்டு நாள் தங்கினார்.
- 2
மூன்றாம் நாள், சவுலின் பாசறையிலிருந்து கிழிந்த ஆடைகளோடும் புழுதிபடிந்த தலையோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான்.
- 3
"நீ எங்கிருந்து வருகிறாய்? என்று தாவீது அவனை வினவ,"நான் இஸ்ரயேல் பாசறையினின்று தப்பி வந்துவிட்டேன்"என்று அவன் பதில் கூறினான்.
- 4
"என்ன நடந்தது? என்னிடம் சொல், என்று தாவீது கேட்க,"அவன் வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்; அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்து விட்டனர்; சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர்"என்று கூறினான்.
- 11
தாவீது தம் ஆடைகளை பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர்.
- 12
சவுலுக்காகவும் அவருடைய மகன் யோனத்தானுக்காகவும் ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்ரயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலை வரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்க்ள.
- 19
"இஸ்ரயேல்! உனது மாட்சி உனது மலைகளிலே மாண்டு கிடக்கிறது! மாவீரர் எவ்வாறு மடிந்தனர்!
- 23
சவுல்! யோனத்தான்! அன்புடையார், அருளுடையார்! வாழ்விலும் சாவிலும் இணைப்பிரியார்! கழுகினும் அவர்கள் விரைந்து செல்வர்! அரியினும் அவர்கள் வலிமைமிக்கோர்!
- 24
இஸ்ரயேல் புதல்வியரே! சவுலுக்காக அழுங்கள்! செந்நிற மென்துகிலால் உங்களை உடுத்தியவர் அவரே! பொன்னின் நகைகளினால் உம் உடைகளை ஒளிரச் செய்தாரே!
- 25
போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்ந்துபட்டனர்! உன் மலைகளிலே யோனத்தான் மாண்டு கிடக்கின்றான்!
- 26
சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என் மீது பொழிந்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலையும் மிஞ்சியது அன்றோ!
- 27
மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! போர்க்கலன்கள் எங்ஙனம் அழித்தன!
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.