Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

DAILY MASS

Today’s
Readings

வெள்ளி, 30 ஜனவரி, 2026

பொதுக்காலம்

Weekday · Friday of the 3rd week of Ordinary Time

← Previous day
Next day →

முதல் வாசகம்

2 சாமுவேல் 11:1-4a, 5-10a, 13-17

  1. 1

    இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்கு செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இரபாவை முற்றுகையிட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார்.

  2. 2

    ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததைக் தாவீது கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்டிருந்தாள்.

  3. 3

    தாவீது அவளை யார் என்று கேட்க, ஆளனுப்பினார்."அவள் எலியாவின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா"என்று கூறினர்.

  4. 4

    தாவீது தூதனுப்பி அவளை வரவழைத்தார். அப்பொழுதுதான் மாதவிலக்கு முடிந்து அவள் தன்னைத் தூய்மைப்படுத்தியிருந்தாள். அவள் தம்மிடம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தம் இல்லம் சென்றாள்.

  5. 5

    அப்பெண் கருவுற்று தாவீதிடம் ஆளனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள்.

  6. 6

    அப்பொழுது தாவீது"இத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பி வை"என்று யோபாவுக்குச் செய்தி அனுப்பினார். யோவாபு உரியாவைத் தாவீதிடம் அனுப்பிவைத்தார்.

  7. 7

    உரியா தாவீதிடம் வந்ததும் அவர் யோவாபின் நலம் பற்றியும் வீரர்களின் நலம் பற்றியும் போரின் போக்குப் பற்றியும் விசாரித்தார்.

  8. 8

    பிறகு தாவீது உரியாவிடம் உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக் கொள் என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார்.

  9. 9

    உரியாவோ தம் தலைவரின் பணியாளர் அனைவரோடும் அரண்மனை வாயிலிலேயே படுத்துக் கொண்டார். தம் வீட்டுக்குச் செல்லவில்லை.

  10. 10

    உரியா தம் வீட்டுக்கு செல்லவில்லை என்று தாவீது அறிந்தும் தாவீது அவரிடம் நீ நெடும் தொலைவிலிருந்தும் வரவில்லையா? பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை? என்று கேட்டார்.

  11. 13

    தாவீது அவரை அழைத்து அவரோடு உண்டு குடித்து, அவருக்கு குடிபோதையூட்டினார். தலைவரின் பணியாளரோடு தம் படுக்கையில் தூங்கச் சென்றார். தம் வீட்டுக்கு அவர் செல்லவே இல்லை.

  12. 14

    காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார்.

  13. 15

    அம்மடலில் அவர்,"உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டு பின்வாங்கு. அவன் வெட்டுண்டு மடியட்டும்"என்று குறிப்பிட்டிருந்தார்.

  14. 16

    யோவாபு நகரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த போது வலிமைமிகு எதிரிகள் இருந்த இடத்தை அறிந்து அங்கே உரியாவை நிறுத்தினார்.

  15. 17

    நகரின் ஆள்கள் புறப்பட்டு வந்து யோவாபைத் தாக்கினர். அப்பொழுது போரில் வீழ்ந்தவருள் தாவீதின் வீரர்களும் சிலர். இத்தியர் உரியாவும் மாண்டார்.

வாசக எழுத்துக்குறி ஒரு வசனத்தின் பகுதியைக் குறிக்கும். இங்கே முழு வசனம் காட்டப்படுகிறது.

தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல்கள் 51:3-4, 5-6a, 6bcd-7, 10-11

  1. 3

    ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது.

  2. 4

    உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.

  3. 5

    இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள்.

  4. 6

    இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.

  5. 7

    ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்.

  6. 10

    கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.

  7. 11

    உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.

வாசக எழுத்துக்குறி ஒரு வசனத்தின் பகுதியைக் குறிக்கும். இங்கே முழு வசனம் காட்டப்படுகிறது.

தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.

நற்செய்தி

மாற்கு நற்செய்தி 4:26-34

  1. 26

    தொடர்ந்து இயேசு,"இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்;

  2. 27

    நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது.

  3. 28

    முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது.

  4. 29

    பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது"என்று கூறினார்.

  5. 30

    மேலும் அவர்,"இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்?

  6. 31

    அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது.

  7. 32

    அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள்விடும்"என்று கூறினார்.

  8. 33

    அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார்.

  9. 34

    உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.

தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.