- 17
"திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
- 18
"விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
- 19
எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.
- 20
மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.
- 21
"கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்"என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்.
- 22
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்;"தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ"முட்டாளே"என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்;"அறிவிலியே"என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.
- 23
ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,
- 24
அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
- 25
உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.
- 26
கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.
- 27
"' விபசாரம் செய்யாதே ' எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
- 28
ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.
- 29
உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.
- 30
உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.
- 31
"தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்"எனக் கூறப்பட்டிருக்கிறது.
- 32
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.
- 33
மேலும்,"பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்"என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
- 34
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை.
- 35
மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம்.
- 36
உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது.
- 37
ஆகவே நீங்கள் பேசும்போது ' ஆம் ' என்றால் ' ஆம் ' எனவும் ' இல்லை ' என்றால் ' இல்லை ' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.