முதல் வாசகம்
யாக்கோபு எழுதிய திருமுகம் 1:1-11
- 1
சிதறுண்டு வாழும் பன்னிரு குலத்தினருக்கு, கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பணியாளனாகிய யாக்கோபு வாழ்த்துக் கூறி எழுதுவது;
- 2
என் சகோதர சகோதரிகளே, பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டிருங்கள்.
- 3
உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும்.
- 4
உங்கள் மனவுறுதி நிறைவான செயல்களால் விளங்கட்டும். அப்பொழுது எக்குறையுமின்றி முற்றும் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.
- 5
உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும் அப்போது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர்.
- 6
ஆனால் நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள்.
- 7
எனவே இத்தகைய இருமனமுள்ள,
- 8
நிலையற்ற போக்குடையவர்கள் ஆண்டவரிடம் ஏதாவது பெற முடியும் என நினைக்காதிருக்கட்டும்.
- 9
தாழ்நிலையில் உள்ள சகோதரர் சகோதரிகள் தாங்கள் உயர்வுபெறும்போது மகிழ்ச்சியடைவார்களாக!
- 10
செல்வச் செழிப்பில் இருப்பவர்கள் தாங்கள் தாழ்நிலை அடையும்போதும் மகிழ்ச்சியாய் இருப்பார்களாக! ஏனெனில் செல்வர்கள் புல்வெளிப் பூவைப்போல மறைந்தொழிவார்கள்.
- 11
கதிரவன் எழ, வெயில் ஏறிப் புல் உலர்ந்துபோம். அதன் பூ வதங்கி விழும்; அதன் அழகிய தோற்றமும் அழிந்துவிடும். அவ்வாறே செல்வரும் தம் அலுவல்களில் ஈடுபடும்போதே அழிவுறுவர்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.