- 5
அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது.
- 6
அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல்.
- 7
அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார்.
- 8
இயேசு அவரிடம்,"குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்"என்று கேட்டார்.
- 9
அச் சமாரியப் பெண் அவரிடம்,"நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?"என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை.
- 10
இயேசு அவரைப் பார்த்து,"கடவுளுடைய கொடை எது என்பதையும்"குடிக்கத் தண்ணீர் கொடும்"எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்"என்றார்.
- 11
அவர் இயேசுவிடம்,"ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?
- 12
எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்"என்றார்.
- 13
இயேசு அவரைப் பா h த்து,"இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும்.
- 14
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்"என்றார்.
- 15
அப்பெண் அவரை நோக்கி,"ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது"என்றார்.
- 16
இயேசு அவரிடம்,"நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும்"என்று கூறினார்.
- 17
அப்பெண் அவரைப் பார்த்து,"எனக்குக் கணவர் இல்லையே"என்றார். இயேசு அவரிடம்,"எனக்குக் கணவர் இல்லை"என நீர் சொல்வது சரியே.
- 18
உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே"என்றார்.
- 19
அப்பெண் அவரிடம்,"ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்.
- 20
எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே"என்றார்.
- 21
இயேசு அவரிடம்,"அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்.
- 22
யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.
- 23
காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர்.
- 24
கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்"என்றார்.
- 25
அப்பெண் அவரிடம்,"கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்"என்றார்.
- 26
இயேசு அவரிடம்,"உம்மோடு பேசும் நானே அவர்"என்றார்.
- 27
அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும்"என்ன செய்ய வேண்டும்?"என்றோ,"அவரோடு என்ன பேசுகிறீர்?"என்றோ எவரும் கேட்கவில்லை.
- 28
அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம்,
- 29
"நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து வாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!"என்றார்.
- 30
அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்.
- 31
அதற்கிடையில் சீடர்,"ரபி, உண்ணும்"என்று வேண்டினர்.
- 32
இயேசு அவர்களிடம்,"நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது"என்றார்.
- 33
"யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ"என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
- 34
இயேசு அவர்களிடம்,"என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.
- 35
"நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை"என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது.
- 36
அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர்.
- 37
நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.
- 38
இவ்வாறு"விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்"என்னும் கூற்று உண்மையாயிற்று"என்றார்.
- 39
"நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்"என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.
- 40
சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார்.
- 41
அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர்.
- 42
அவர்கள் அப்பெண்ணிடம்,"இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்"என்றார்கள்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.