Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

DAILY MASS

Today’s
Readings

சனி, 4 ஏப்ரல், 2026

புனித வாரம்

TRIDUUM · Holy Saturday/Easter Vigil

← Previous day
Next day →

முதல் வாசகம்

எசாயா 54:5-14

  1. 5

    ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர்,"படைகளின் ஆண்டவர்"என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்;"உலக முழுமைக்கும் கடவுள்"என அவர் அழைக்கப்படுகின்றார்.

  2. 6

    ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள்.

  3. 7

    நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.

  4. 8

    பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என்முகத்தை உனக்கு மறைத்தேன்; ஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர்.

  5. 9

    எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது; நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்; அவ்வாறே உம்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.

  6. 10

    மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்; போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.

  7. 11

    துயருற்றவளே, சூறைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டவளே, ஆறுதல் பெறாது தவிப்பவளே, இதோ, மாணிக்கக்கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன், நீலக்கற்களால் உன் நிலைக்களத்தை நிறுவுவேன்.

  8. 12

    உன் கால்மாடங்களைச் சிவப்புக் கற்களாலும், உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும் உன் மதில்கள் அனைத்தையும் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன்.

  9. 13

    உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்; உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர்.

  10. 14

    நேர்மையில் நீ நிலைநாட்டப்படுவாய்; ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்; நீ அஞ்சாதே! திகில் உன்னை அணுகாது.

தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல்கள் 118:1-2, 16-17, 22-23

  1. 1

    ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

  2. 2

    ' என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு ' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!

  3. 16

    ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.

  4. 17

    நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்;

  5. 22

    கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!

  6. 23

    ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!

தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.

இரண்டாம் வாசகம்

விடுதலைப் பயணம் 14:15-15:1

  1. 15

    ஆண்டவர் மோசேயை நோக்கி,"ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல்.

  2. 16

    கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள்.

  3. 17

    நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன்.

  4. 18

    பார்வோனையும் அவன் தேர்களையும் குதி i வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது,"நானே ஆண்டவர்"என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்"என்றார்.

  5. 19

    இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் இடம்பெயர்ந்து அவர்களுக்குப் பின்வந்து நின்றார். மேகத்தூணும் இடம்பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்று கொண்டது.

  6. 20

    அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது; இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை.

  7. 21

    மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது.

  8. 22

    வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.

  9. 23

    எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர்.

  10. 24

    பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார்.

  11. 25

    அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர்,"இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்று விடுவோம். ஏனெனில், ஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்"என்றனர்.

  12. 26

    ஆண்டவர் மோசேயை நோக்கி,"நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு"என்றார்.

  13. 27

    மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்குஎதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார்.

  14. 28

    திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரைவீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை.

  15. 29

    ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது.

  16. 30

    இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர்.

  17. 31

    எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர்.

  18. 1

    அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு; ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.

தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.

நற்செய்தி

மத்தேயு நற்செய்தி 28:1-10

  1. 1

    ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்.

  2. 2

    திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்.

  3. 3

    அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது.

  4. 4

    அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.

  5. 5

    அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து,"நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும்.

  6. 6

    அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.

  7. 7

    நீங்கள் விரைந்து சென்று,"இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்"எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்"என்றார்.

  8. 8

    அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.

  9. 9

    திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள்.

  10. 10

    அப்பொழுது இயேசு அவர்களிடம்,"அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்"என்றார்.

தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.