முதல் வாசகம்
திருத்தூதர் பணிகள் 11:1-18
- 1
பிற இனத்தவரும் கடவுளின் வார்த்தையை ஏற்றுக் கொண்டதைப் பற்றித் திருத்தூதர்களும் யூதேயாவிலுள்ள சகோதரர் சகோதரிகளும் கேள்விப்பட்டார்கள்.
- 2
பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, விருத்த சேதனம் செய்துகொண்டவர்கள்"அவரோடு வாதிட்டனர்.
- 3
"நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?"என்று குறை கூறினர்.
- 4
பேதுரு நடந்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாக விளக்கிக் கூறத் தொடங்கினார்.
- 5
"நான் யோப்பா நகரில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது மெய்ம்மறந்த நிலையில் ஒரு காட்சி கண்டேன். பெரிய கப்பற்பாயைப் போன்ற ஒரு விரிப்பு நான்கு முனைகளிலும் கட்டப்பட்டு வானத்திலிருந்து இறக்கப்பட்டு என்னிடம் வந்தது.
- 6
அதை நான் கவனமாக நோக்கியபோது, தரையில் நடப்பன, ஊர்வன, வானில் பறப்பன, காட்டு விலங்குகள் ஆகியவற்றைக் கண்டேன்.
- 7
"பேதுரு, எழுந்திடு! இவற்றைக் கொன்று சாப்பிடு"என்னும் ஒரு குரல் ஒலிப்பதையும் கேட்டேன்.
- 8
அதற்கு நான்,"வேண்டவே வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும் தூய்மையற்றதுமான எதுவும் ஒருபோதும் என் வாய்க்குள் சென்றதில்லை"என்றேன்.
- 9
இரண்டாம் முறையும் வானிலிருந்து மறுமொழியாக,"தூய்மையானது எனக் கடவுள் கருதுவதை தீட்டாகக் கருதாதே"என்று அக்குரல் ஒலித்தது.
- 10
இப்படி மும்முறை நடந்தபின்பு யாவும் வானத்துக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டன.
- 11
அந்நேரத்தில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூவர் நான் தங்கியிருந்த வீட்டின் முன் வந்து நின்றனர்.
- 12
தூய ஆவியார் என்னிடம்,"தயக்கம் எதுமின்றி அவர்களோடு செல்"என்று கூறினார். உடனே நானும் இந்த ஆறு சகோதரர்களுமாக அந்த மனிதர் வீட்டுக்குச் சென்றோம்.
- 13
அவர் தம் வீட்டில் வானதூதர் வந்து நின்றதைக் கண்டதாகவும், அத்தூதர் பேதுரு என்னும்; பெயர் கொண்ட சீமோனை வரவழையும்;
- 14
நீரும் உம்வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர் உம்மோடு பேசுவார் என்று தமக்குக் கூறியதாகவும் எங்களுக்கு அறிவித்தார்.
- 15
நான் பேசத் தொடங்கியதும் தூய ஆவி முதலில் நம்மீது இறங்கி வந்தது போல் அவர்கள் மீதும் இறங்கி வந்தது.
- 16
அப்போது,"யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார்; ஆனால் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப்பெறுவீர்கள்"என்ற ஆண்டவரின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன்.
- 17
இப்போதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டபோது நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?"என்றார்.
- 18
இவற்றைக் கேட்டு அவர்கள் அமைதி அடைந்தனர்; வாழ்வுக்கு வழியான மனம்மாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார் என்று கூறி அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.