முதல் வாசகம்
திருத்தூதர் பணிகள் 15:7-21
- 7
நெடு நேர விவாதத்துக்குப்பின்பு பேதுரு எழுந்து அவர்களை நோக்கிக் கூறியது;"சகோதரரே, பிற இனத்தவர் என் வாய்மொழி வழியாக நற்செய்தியைக்; கேட்டு அதில் நம்பிக்கைகொள்ளும்படி கடவுள் தொடக்கத்திலேயே உங்களிடமிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
- 8
உள்ளங்களை அறியும் கடவுள் நமக்குத் தூய ஆவியைக் கொடுத்ததுபோல் அவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏற்றுக்கொண்டார்.
- 9
நம்பிக்கையால் அவர்களுடைய உள்ளங்களைத் தூய்மைப்படுத்தினார். நமக்கும் அவர்களுக்கும் இடையே அவர் எந்த வேறுபாடும் காட்டவில்லை.
- 10
ஆகவே நம் மூதாதையரோ நாமோ சுமக்க இயலாத நுகத்தை இப்போது நீங்கள் இந்தச் சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்?
- 11
ஆண்டவர் இயேசுவின் அருளால் நாம் மீட்புப் பெறுவதுபோலவே அவர்களும் மீட்புப் பெறுகிறார்கள் என நம்புகிறோம்."
- 12
இதைக் கேட்டு அங்குத் திரண்டிருந்தோர் யாவரும் அமைதியாயினர். கடவுள் தங்கள் வழியாகப் பிற இனத்தவரிடம் அடையாளங்களும் அருஞ்செயல்களும் செய்தார் என்பதைப் பர்னபாவும் பவுலும் எடுத்துரைத்ததை அவர்கள் கேட்டுக் கொண்டிருந்னர்.
- 13
அவர்கள் பேசி முடித்ததும், யாக்கோபு அவர்களைப் பார்த்துக் கூறியது;"சகோதரரே, நான் கூறுவதைக் கேளுங்கள்.
- 14
கடவுள் பிற இனத்தாரிடமிருந்து தமக்கென மக்களைத் தேர்ந்துகொள்ள முதலில் அவர்களைத் தேடி வந்த செய்தியைச் சீமோன் எடுத்துரைக்கக் கேட்டீர்கள்.
- 15
இறைவாக்கினர் சொற்களும் இதற்கு ஒத்திருக்கின்றன. அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்;
- 16
"இவற்றுக்குப்பின் நான் திரும்பி வந்து விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் எழுப்புவேன்; அதிலுள்ள கிழிசல்களைப் பழுது பார்த்து அதைச் சீர்ப்படுத்துவேன்.
- 17
அப்பொழுது மக்களுள் எஞ்சியிருப்போரும் என் திருப்பெயரைத் தாங்கியிருக்கும் வேற்று இனத்தார் அனைவரும் ஆண்டவரைத் தேடுவர், என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்."
- 18
தொடக்கத்திலிருந்தே இதனை அவர் தெரியப்படுத்தியுள்ளார்.
- 19
எனவே என் முடிவு இதுவே; கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது.
- 20
ஆனால் சிலைகளுக்குப் படைக்கப்பட்டுத் தீட்டுப்பட்டவை, கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை, இரத்தம் மற்றும் பரத்தைமை ஆகியவற்றைத் தவிர்க்குமாறு அவர்களுக்கு நாம் எழுதவேண்டும்.
- 21
மோசேயின் சட்டத்தை அறிவிப்போர் முற்காலத்திலிருந்தே எல்லா நகரங்களிலும் இருக்கின்றனர்; அதனை ஓய்வுநாள்தோறும் தொழுகைக் கூடங்களில் வாசித்தும் வருகின்றனர்."
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.