முதல் வாசகம்
திருத்தூதர் பணிகள் 16:22-34
- 22
உடனே மக்கள் திரண்டெழுந்து அவர்களைத் தாக்கினார்கள். நடுவர்கள் அவர்களுடைய மேலுடைகளைக் கிழித்து அவர்களைத் தடியால் அடிக்க ஆணையிட்டார்கள்.
- 23
அவர்களை நன்கு அடித்துச் சிறையில் தள்ளிக்கருத்தாய்க் காவல் செய்யுமாறுசிறைக்காவலர் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள்.
- 24
இவ்வாறு கட்டளை பெற்ற அவர் அவர்களை உட்சிறையில் தள்ளி, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டிவைத்தார்.
- 25
நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினார். மற்ற கைதிகளோ இதனைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
- 26
திடீரென ஒருபெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைக்கூடத்தின் அடித்தளமே அதிர்ந்தது. உடனே கதவுகள் அனைத்தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுந்தன.
- 27
சிறைக் காவலர் விழித்தெழுந்து, சிறைக்கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி, வாளை உருவித் தற்கொலைசெய்துகொள்ள முயன்றார்.
- 28
பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு,"நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்து கொள்ளாதீர்; நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்"என்றார்.
- 29
சிறைக் காவலர் உடனே ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொல்லி, விரைந்தோடி வந்து நடுங்கியவாறே பவுல், சீலா ஆகியோரின் காலில் விழுந்தார்.
- 30
அவர்களை வெளியே அழைத்து வந்து,"பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்யவேண்டும்?"என்று கேட்டார்.
- 31
அதற்க அவர்கள்,"ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்"என்றார்கள்.
- 32
பின்பு அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும் அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள்.
- 33
அவ்விரவு நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களின் காயங்களைக் கழுவினார். பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள்.
- 34
அவர் அவர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினார். கடவுள்மீது நம்பிக்கை கொண்டதால் தம் வீட்டார் அனைவரோடும் சேர்ந்து அவர் பேருவகை அடைந்தார்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.