முதல் வாசகம்
2 அரசர்கள் 19:9b-11, 14-21, 31-35a, 36
- 9
அப்பொழுது, அசீரிய மன்னன், எத்தியோப்பிய மன்னனான திராக்கா தனக்கு எதிராய்ப் படைதிரட்டிக்கொண்டு வருவதாகக் கேள்வியுற்று எசேக்கியாவிடம் மீண்டும் தூதரை அனுப்பி,
- 10
"யூதா அரசன் எசேக்கியாவிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்; ' எருசலேம் அசீரிய மன்னனின் கையில் ஒப்புவிக்கப்பட மாட்டாது ' என்று கூறும் உன் கடவுளை நம்பி ஏமாந்துவிடாதே.
- 11
இதோ! அசீரியா மன்னர்கள் எல்லா நாடுகளுக்கும் செய்திருப்பதையும், அவற்றை முற்றிலும் அழித்ததையும் நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ மட்டும் தப்பிவிட முடியுமா?
- 14
எசேக்கியா தூதரின் கையிலிருந்த மடலை வாங்கி வாசித்தபின் கோவிலினுள் சென்று ஆண்டவர் திருமுன் மடலை விரித்து வைத்தார்.
- 15
மேலும் எசேக்கியா ஆண்டவரை மன்றாடிக் கூறியது;"கெருபுகள்மேல் வீற்றிருக்கும் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! இவ்வுலகத்து அரசுகளுக்கெல்லாம் நீர் ஒருவரே கடவுள்! விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே!
- 16
ஆண்டவரே! நீர் செவி சாய்த்துக் கேட்டருளும். ஆண்டவரே! உம் விழிகளைத் திறந்து என்னை நோக்கியருளும். தூதனுப்பி என்றுமுள கடவுளைப் பழித்துரைக்கும் சனகெரிபின் சொற்களைக் கேட்பீராக!
- 17
ஆண்டவரே! அசீரிய மன்னர்கள் வேற்றினத்தாரையும், அவர்கள் நாடுகளையும் அழித்தது உண்மைதான்!
- 18
அவர்கள் வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளை நெருப்பிலிட்டு எரித்தனர். ஏனெனில் அவை உண்மைக் கடவுளல்ல; மரத்தாலும் கல்லாலும் மனிதன் செய்தவையே; எனவே அவற்றை அழிக்க முடிந்தது.
- 19
எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! இப்பொழுது இவன் கையிலிருந்து எங்களைக் காத்தருளும். இதன் மூலம், நீர் ஒருவரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகின் எல்லா அரசுகளும் அறிந்துகொள்ளும்."
- 20
அப்பொழுது ஆமோட்சின் மகன் எசாயா எசேக்கியாவிடம் ஆளனுப்பிச் சொன்னது;"இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; அசீரிய மன்னன் சனகெரிபைப் பற்றிய உன் வேண்டுதலைக் கேட்டேன்.
- 21
அவனக்கு எதிராக ஆண்டவர் கூறிய வார்த்தை இதுவே; கன்னிமகள் சீயோன் உன்னை இகழ்கிறாள்; உன்னைப் பார்த்து நகைக்கிறாள்; மகள் எருசலேம் பின் நின்று தலையசைக்கிறாள்.
- 31
ஏனெனில் எஞ்சியோர் எருசலேமிலிருந்து வெளியேறுவர். உயிர் பிழைத்தோர் சீயோன் மலையினின்று புறப்படுவர். படைகளின் ஆண்டவரது ஆர்வமே இதை நிறைவேற்றும்!
- 32
ஆதலால் ஆண்டவர் அசீரிய மன்னனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்; இந்நகருக்குள் அவன் நுழையமாட்டான்; அதில் அம்பு எய்ய மாட்டான்; அதை எதிர்த்துக் கேடயத்துடன் வரமாட்டான். அதற்கு எதிராக முற்றுகைத்தளம் எழுப்ப மாட்டான்.
- 33
அவன் வந்த வழியே திரும்பிப் போவான்; இந்நகருக்குள் நுழையவே மாட்டான் என்கிறார் ஆண்டவர்.
- 34
இந்நகரை நான் பாதுகாப்பேன்; என் பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் அதை விடுவிப்பேன்."
- 35
அன்றிரவு ஆண்டவரின் தூதர் புறப்பட்டுச் சென்று அசீரியரின் பாளையத்தில் இலட்சத்து என்பத்தையாயிரம் பேரைக் கொன்றார். மக்கள் காலையில் எழுந்தபோது அங்கு அனைவரும் செத்துப் பிணமாய்க் கிடந்ததைக் கண்டனர்.
- 36
எனவே அசீரிய மன்னன் சனகெரிபு திரும்பிச் சென்று நினிவேயில் தங்கியிருந்தான்.
வாசக எழுத்துக்குறி ஒரு வசனத்தின் பகுதியைக் குறிக்கும். இங்கே முழு வசனம் காட்டப்படுகிறது.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.