- 1
வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.
- 2
பரிசேயரும், மறைநூல் அறிஞரும்,"இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே"என்று முணுமுணுத்தனர்.
- 3
அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்;
- 11
மேலும் இயேசு கூறியது;"ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.
- 12
அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி,"அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்"என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.
- 13
சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.
- 14
அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;
- 15
எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.
- 16
அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.
- 17
அவர் அறிவு தெளிந்தவராய்,"என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!
- 18
நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய்,"அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்;
- 19
இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்"என்று சொல்லிக்கொண்டார்.
- 20
"உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.
- 21
மகனோ அவரிடம்,"அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்"என்றார்.
- 22
தந்தை தம் பணியாளரை நோக்கி,"முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;
- 23
கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.
- 24
ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்"என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.
- 25
"அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு,
- 26
ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து,"இதெல்லாம் என்ன?"என்று வினவினார்.
- 27
அதற்கு ஊழியர் அவரிடம்,"உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்"என்றார்.
- 28
அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.
- 29
அதற்கு அவர் தந்தையிடம்,"பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.
- 30
ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!"என்றார்.
- 31
அதற்குத் தந்தை,"மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.
- 32
இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்"என்றார்."
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.