முதல் வாசகம்
விடுதலைப் பயணம் 32:7-14
- 7
அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி,"இங்கிருந்து இறங்கிப்போ. நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர்.
- 8
நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு,"இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே"என்று கூறிக் கொள்கிறார்கள்"என்றார்.
- 9
மேலும் ஆண்டவர் மோசேயிடம்,"இம் மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக்கழுத்துள்ள மக்கள் அவர்கள்.
- 10
இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன் உன்னையோ பேரினமாக்குவேன்"என்றார்.
- 11
அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி,"ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமைமிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்?
- 12
"மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக் கூட்டிச் சென்றார்"என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்? உமது கடுஞ்சினத்தை விட்டுவிட்டு உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்.
- 13
உம் அடியாராகிய ஆபிரகாமையும், இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன். நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை எனறென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே"என்று வேண்டிக்கொண்டார்.
- 14
அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.