- 40
கூட்டத்தில் சிலர் இவ்வார்த்தைகளைக் கேட்டு,"வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே"என்றனர்.
- 41
வேறு சிலர்,"மெசியா இவரே"என்றனர். மற்றும் சிலர்,"கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?
- 42
தாவீதின்; மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?"என்றனர்.
- 43
இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது.
- 44
சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை.
- 45
தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம்,"ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?"என்று கேட்டார்கள்.
- 46
காவலர் மறுமொழியாக,"அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை"என்றனர்.
- 47
பரிசேயர் அவர்களைப் பார்த்து,"நீங்களும் ஏமாந்து போனீர்களோ?
- 48
தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா?
- 49
இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்"என்றனர்.
- 50
அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம்,
- 51
"ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?"என்று கேட்டார்.
- 52
அவர்கள் மறுமொழியாக,"நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்"என்றார்கள்.
- 53
( அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.)
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.