முதல் வாசகம்
தொடக்க நூல் 1:1-2:2
- 1
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,
- 2
மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.
- 3
அப்பொழுது கடவுள்,"ஒளி தோன்றுக!"என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்.
- 4
கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.
- 5
கடவுள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.
- 6
அப்பொழுது கடவுள்,"நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்"என்றார்.
- 7
கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று.
- 8
கடவுள் வானத்திற்கு"விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.
- 9
அப்பொழுது கடவுள்,"விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!"என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
- 10
கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
- 11
அப்பொழுது கடவுள்,"புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்"என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
- 12
புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார்.
- 13
மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.
- 14
அப்பொழுது கடவுள்,"பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக!
- 15
அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்"என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
- 16
கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.
- 17
கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்;
- 18
பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
- 19
மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.
- 20
அப்பொழுது கடவுள்,"திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!"என்றார்.
- 21
இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
- 22
கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி"பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்"என்றுரைத்தார்.
- 23
மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது.
- 24
அப்பொழுது கடவுள்,"கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக"என்றார்.
- 25
கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
- 26
அப்பொழுது கடவுள்,"மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்"என்றார்.
- 27
கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
- 28
கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி,"பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்"என்றார்.
- 29
அப்பொழுது கடவுள்,"மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும்.
- 30
எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்"என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
- 31
கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.
- 1
விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின.
- 2
மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.