முதல் வாசகம்
சீராக்கின் ஞானம் 2:1-11
- 1
குழந்தாய், ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால், சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள்.
- 2
உள்ளத்தில் உண்மையுள்ளவனாய் இரு; உறுதியாக இரு; துன்ப வேளைகளில் பதற்றமுடன் செயலாற்றாதே.
- 3
ஆண்டவரைச் சிக்கெனப் பிடித்துக்கொள்; அவரை விட்டு விலகிச் செல்லாதே. உன் வாழ்க்கையின் முடிவில் வளமை அடைவாய்.
- 4
என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்; இழிவுவரும்போது பொறுமையாய் இரு.
- 5
நெருப்பில் பொன் புடமிடப்படுகிறது; ஏற்புடைய மனிதர் மானக்கேடு எனும் உலையில் சோதித்துப் பார்க்கப்படுகின்றனர்.
- 6
ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்; அவர் உனக்குத் துணை செய்வார். உன் வழிகளைச் சீர்படுத்து; அவரிடம் நம்பிக்கை கொள்.
- 7
ஆண்டவருக்கு அஞ்சுவோரே. அவரிடம் இரக்கத்துக்காகக் காத்திருங்கள்; நெறி பிறழாதீர்கள்; பிறழ்ந்தால் வீழ்ச்சி அடைவீர்கள்.
- 8
ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்; உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காமற் போகாது.
- 9
ஆண்டவருக்கு அஞ்சுவோரே, நல்லவைமீது நம்பிக்கை கொள்ளுங்கள்; நிலையான மகிழ்ச்சியையும் இரக்கத்தையும் எதிர்நோக்கியிருங்கள்.
- 10
முந்திய தலைமுறைகளை எண்ணிப்பாருங்கள். ஆண்டவரிடம் பற்றுறுதி கொண்டிருந்தோருள் ஏமாற்றம் அடைந்தவர் யார்? அவருக்கு அஞ்சி நடந்தோருள் கைவிடப்பட்டவர் யார்? அவரை மன்றாடினோருள் புறக்கணிக்கப்பட்டவர் யார்?
- 11
ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்; பாவங்களை மன்னிப்பவர்; துன்ப வேளையில் காப்பாற்றுகிறவர்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.