முதல் வாசகம்
சீராக்கின் ஞானம் 17:1-15
- 1
ஆண்டவர் மனிதரை மண்ணால் படைத்தார்; மீண்டும் அந்த மண்ணுக்கே திரும்புமாறு செய்கிறார்.
- 2
அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலவரையை வகுத்தார்; மண்ணுலகில் உள்ளவற்றின்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
- 3
தமக்கு உள்ளதைப்போன்ற வலிமையை அவர்களுக்கு வழங்கினார்; தமது சாயலாகவே அவர்களை உருவாக்கினார்.
- 4
எல்லா உயிரினங்களும் மனிதருக்கு அஞ்சும்படி செய்தார்; விலங்குகள், பறவைகள்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
- 5
( தம் ஐந்தறிவைப் பயன்படுத்தும் உரிமையை ஆண்டவர் அவர்களுக்கு அளித்தார்; ஆறாவதாகத் தம் அறிவுத்திறனில் பங்கு கொடுத்தார்; அந்த ஆறறிவையும் விளக்கும் பகுத்தறிவை ஏழாவது கொடையாக வழங்கினார்.)
- 6
விருப்புரிமை, நாக்கு, கண், காது ஆகியவற்றையும் சிந்திப்பதற்கு ஓர் உள்ளத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்.
- 7
அவர்களை அறிவாலும் கூர்மதியாலும் நிரப்பினார்; நன்மை தீமையையும் அவர்களுக்குக் காட்டினார்.
- 8
அவர்களின் உள்ளத்தைப்பற்றி விழிப்பாய் இருந்தார்; தம் செயல்களின் மேன்மையைக் காட்டினார்.
- 9
( தம் வியத்தகு செயல்கள் பற்றி என்றும் பெருமைப்படும் உரிமையை அவர்களுக்கு அளித்தார்.)
- 10
அவர்கள் அவரது திருப்பெயரைப் புகழ்வார்கள்; இவ்வாறு அவருடைய செயல்களின் மேன்மையைப் பறைசாற்றுவார்கள்.
- 11
அறிவை அவர்களுக்கு வழங்கினார்; வாழ்வு அளிக்கும் திருச்சட்டத்தை அவர்களுக்கு உரிமையாக்கினார்.
- 12
அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்துகொண்டார்; தம் தீர்ப்புகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.
- 13
அவர்களின் கண்கள் அவருடைய மாட்சியைக் கண்டன; அவர்களின் செவிகள் அவரது மாட்சியின் குரலைக் கேட்டன.
- 14
"எல்லாவகைத் தீமைகள் குறித்தும் கவனமாய் இருங்கள்"என்று அவர் எச்சரித்தார்; அடுத்திருப்பவர்களைப் பற்றிய கட்டளைகளை அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்.
- 15
மனிதரின் வழிகளை ஆண்டவர் எப்போதும் அறிவார்; அவரின் பார்வையிலிருந்து அவை மறைந்திருப்பதில்லை.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.