- 17
இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு,"நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?"என்று அவரைக் கேட்டார்.
- 18
அதற்கு இயேசு அவரிடம்,"நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.
- 19
உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா?"கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட""என்றார்.
- 20
அவர் இயேசுவிடம்,"போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்"என்று கூறினார்.
- 21
அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி,"உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்"என்று அவரிடம் கூறினார்.
- 22
இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
- 23
இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம்,"செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்"என்றார்.
- 24
சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து,"பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.
- 25
அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது"என்றார்.
- 26
சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய்,"பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்?"என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
- 27
இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி,"மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்"என்றார்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.