முதல் வாசகம்
சீராக்கின் ஞானம் 42:15-25
- 15
இப்போது ஆண்டவருடைய செயல்களை நினைவுபடுத்துவேன்; நான் கண்டவற்றை எடுத்துரைப்பேன். ஆண்டவருடைய சொல்லால் அவருடைய செயல்கள் உண்டாகின்றன.
- 16
ஒளிரும் கதிரவன் அனைத்தையும் காண்கின்றான். ஆண்டவருடைய செயல் அவருடைய மாட்சியால் நிறைந்துள்ளது.
- 17
அனைத்தையும் தமது மாட்சியில் நிலைநிறுத்திய எல்லாம் வல்ல ஆண்டவர், தம் வியத்தகு செயல்கள் எல்லாவற்றையும் எடுத்துரைக்கும்படி தம் தூயவர்களுக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை.
- 18
படுகுழியையும் மனித உள்ளத்தையும் அவர் ஊடுருவி நோக்குகிறார்; மனிதர்களுடைய சூழ்ச்சி நிறை எண்ணங்களை ஆராய்கிறார். அறியக்கூடியவற்றையெல்லாம் உன்னத இறைவன் அறிவார்; காலத்தின் குறிகளை உற்றுநோக்குகிறார்.
- 19
நிகழ்ந்தவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் அவர் தெரியப்படுத்துகிறார்; மறைந்திருப்பவற்றின் தடயத்தை வெளிப்படுத்துகிறார்.
- 20
எவ்வகை எண்ணமும் அவருக்குத் தெரியாமல் இருப்பதில்லை; ஒரு சொல்கூட அவருக்கு மறைந்திருப்பதில்லை.
- 21
அவர் தமது ஞானத்தின் அரும்பெரும் செயல்களை ஒழுங்குபடுத்தியுள்ளார்; அவரே என்றென்றும் இருக்கின்றவர். யாதொன்றும் கூட்டப்படுவதில்லை, குறைக்கப்படுவதுமில்லை; எவருடைய அறிவுரையும் அவருக்குத் தேவையில்லை.
- 22
அவருடைய செயல்கள் அனைத்தும் எத்துணை விரும்பத்தக்கவை! பார்ப்பதற்கு எத்துணைப் பளபளப்பானவை!
- 23
இவையெல்லாம் உயிரோடு இருக்கின்றன; எல்லாத் தேவைகளுக்காகவும் என்றும் நிலைத்திருக்கின்றன; எல்லாம் அடிபணிகின்றன.
- 24
எல்லாம் இரட்டையாய் உள்ளன; ஒன்று மற்றொன்றுக்கு எதிராய் இருக்கிறது. யாதொன்றையும் அவர் குறைபடச் செய்யவில்லை.
- 25
ஒன்று மற்றொன்றின் நன்மையை நிறைவுசெய்கிறது. அவருடைய மாட்சியை நிறைவாகக் காண்பவர் எவர்?
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.