முதல் வாசகம்
தோபித்து 2:9-14
- 9
அன்று இரவு குளித்துவிட்டு என் வீட்டு முற்றத்தின் சுவர் அருகில் படுத்து உறங்கினேன். வெப்பமாக இருந்ததால் என் முகத்தை மூடவில்லை.
- 10
என் தலைக்குமேல் சுவரில் குருவிகள் இருந்தது எனக்குத் தெரியாது. அவற்றின் சூடான எச்சம் என் கண்களில் விழுந்தது. உடனே கண்களில் வெண்புள்ளிகள் தோன்றின. நலம் பெறுமாறு மருத்துவர்களிடம் சென்றேன். அவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும் வெண்புள்ளிகளால் என் பார்வை குன்றிவந்தது. இறுதியாகப் பார்வையை முற்றும் இழந்தேன். நான் பார்வையற்றவனாக நான்கு ஆண்டுகள் வாழ்ந்தேன். என் உறவின் முறையார் அனைவரும் எனக்காக வருந்தினர். எலிமாய் செல்லும்வரை இரண்டு ஆண்டுகளாக அகிக்கார் என்னைப் பேணிவந்தான்.
- 11
அக்காலத்தில் என் மனைவி அன்னா பெண்களுக்குரிய கைவேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.
- 12
தன் கைவேலைப்பாடுகளை அவள் உரிமையாளர்களுக்கு அனுப்பிவைக்க, அவர்கள் அவளுக்குக் கூலி கொடுப்பார்கள். திசித்தர் மாதம் ஏழாம் நாள் தான் நெய்திருந்ததை உரிமையாளர்களுக்கு அவள் அனுப்பிவைத்தாள். அவர்கள் அவளுக்கு முழுக் கூலியுடன், விருந்து சமைக்க ஓர் ஆட்டுக்குட்டியையும் கொடுத்தார்கள்.
- 13
அவள் திரும்பி வந்தபொழுது ஆட்டுக்குட்டி கத்தத் தொடங்கியது. உடனே நான் அவளை அழைத்து,"இந்த ஆட்டுக்குட்டி எங்கிருந்து வந்தது?"என்று கேட்டேன்."ஒருவேளை இது திருடப்பட்டதோ? அப்படியானால் உரியவரிடம் இதைத்திருப்பிக் கொடுத்துவிடு; ஏனெனில் திருடிய எதையும் உண்ண நமக்கு உரிமை இல்லை"என்றேன்.
- 14
அதற்கு அவள் என்னிடம்,"கூலிக்கு மேலாக இது எனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது"என்றாள். இருப்பினும் நான் அவளை நம்பவில்லை. உரியவருக்கு அதைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு வற்புறுத்தினேன். அவளது செயலைக் குறித்து நான் நாணினேன். அப்பொழுது அவள் மறுமொழியாக என்னிடம்,"உம்முடைய தருமங்கள் எங்கே? நற்செயல்கள் எங்; கே? உம்முடைய குணம் இப்பொழுது நன்றாகவே புலப்படுகிறது!"என்றாள்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.