முதல் வாசகம்
தோபித்து 12:1, 5-15, 20
- 1
திருமண விழா முடிந்ததும், தோபித்து தம் மகன் தோபியாவை அழைத்து,"மகனே, உன்னுடன் பயணம் செய்த இளைஞருக்கு இப்பொழுது சம்பளம் கொடுத்துவிடு; உரிய தொகையைவிட மிகுதியாகவே கொடு"என்றார்.
- 5
பின்னர் இரபேலை அழைத்து,"நீர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைச் சம்பளமாக எடுத்துக்கொண்டு நலமே சென்று வருக"என்று கூறினார்.
- 6
அப்பொழுது இரபேல் அவர்கள் இருவரையும் தனியாக அழைத்துப் பின்வருமாறு கூறினார்;"கடவுளைப் புகழுங்கள்; அவர் உங்களுக்குச் செய்த நன்மைகளை எல்லா உயிர்கள் முன்னும் அறிக்கையிடுங்கள். அவரது பெயரைப் புகழ்ந்து பாடுங்கள். மனிதர் அனைவர் முன்னும் கடவுளின் செயல்களைப் போற்றிப் புகழ்ந்து அறிக்கையிடத் தயங்காதீர்கள்.
- 7
மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பதும் அறிக்கையிடுவதும் அதனினும் சிறந்தது. நல்லதைச் செய்யுங்கள்; தீமை உங்களை அணுகாது.
- 8
அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட உண்மையான மன்றாட்டு சிறந்தது. ஆனால் நீதியுடன் இணைந்த தருமம் அதைவிடச் சிறந்தது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட நீதியகச் சேர்த்த சிறிதளவு செல்வம் சிறந்தது.
- 9
தருமம் சாவினின்று காப்பாற்றும்; எல்லாப் பருவத்தினின்றும் தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை அது நிறைவுள்ளதாக்கும்.
- 10
பாவமும் அநீதியும் புரிவோர் தங்களுக்குத் தாங்களே கொடிய எதிரிகள்.
- 11
"முழு உண்மையையும் உங்களுக்கு எடுத்துரைப்பேன்; எதையும் உங்களிடமிருந்து மறைக்கமாட்டேன். மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பது அதனினும் சிறந்தது"என்று முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
- 12
நீரும் சாராவும் மன்றாடியபோது நான்தான் உங்கள் வேண்டுதல்களை எடுத்துச்சென்று ஆண்டவரின் மாட்சிமிகு திருமுன் ஒப்படைத்தேன்; இறந்தோரை நீர் புதைத்து வந்தபோதும் நான் அவ்வாறே செய்தேன்.
- 13
நீர் உணவு அருந்துவதைவிட்டு எழுந்து வெளியே சென்று, இறந்தோரை அடக்கம்செய்யத் தயங்காதபோது நானே உம்மைச் சோதிக்க அனுப்பப்பட்டேன்.
- 14
அதேபோல் உமக்கும் உம் மருமகள் சாராவுக்கும் நலம் அருளக் கடவுள் என்னை அனுப்பினார்.
- 15
நான் இரபேல். ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர்"என்றார்.
- 20
இப்பொழுது உலகில் இருக்கும்பொழுதே ஆண்டவரைப் போற்றுங்கள்; கடவுளது புகழை அறிக்கையிடுங்கள். இதோ, நான் என்னை அனுப்பியவரிடமே திரும்புகிறேன். உங்களுக்கு நிகழ்ந்த இவற்றையெல்லாம் எழுதிவையுங்கள்"என்றார். பின்னர் விண்ணகம் நோக்கிச் சென்றார்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.