முதல் வாசகம்
கொரிந்தியருக்கு எழுதிய 2 திருமுகம் 1:18-22
- 18
நான் ஒரே நேரத்தில்"ஆம்"என்றும்"இல்லை"என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராயிருப்பது போல் நான் சொல்வதும் உண்மையே.
- 19
நானும் சில்வானும் திமொத்தேயுவும் உங்களிடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில்"ஆம்"என்றும்"இல்லை"என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர்"ஆம்"என உண்மையையே பேசுபவர்.
- 20
அவர் சொல்லும்"ஆம்"வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப்புகழும்போது அவர் வழியாக"ஆமென்"எனச் சொல்லுகிறோம்.
- 21
கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; இவ்வாறு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.
- 22
அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.
பதிலுரைப் பாடல்
திருப்பாடல்கள் 119:129, 130, 131, 132, 133, 135
- 129
உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன்.
- 130
உம் சொற்களைப்பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது.
- 131
வாயை"ஆ"வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன்.
- 132
உம் பெயரின்மீது பற்றுக்கொண்டோருக்கு நீர் வழக்கமாய்ச் செய்வதுபோல், என் பக்கம் திரும்பி எனக்கும் இரங்கும்!
- 133
உமது வாக்கில்; என் காலடிகளை நிலைப்படுத்தும்! தீயது எதுவும் என்னை மேற்கொள்ளவிடாதேயும்!
- 135
உம் ஊழியன்மீது உமது முகஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.
நற்செய்தி
மத்தேயு நற்செய்தி 5:13-16
- 13
நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.
- 14
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.
- 15
எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.
- 16
இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.