முதல் வாசகம்
கொரிந்தியருக்கு எழுதிய 2 திருமுகம் 11:18, 21-30
- 18
பலர் உலகு சார்ந்த முறையில் பெருமையடித்துக் கொள்வதால் நானும் அவ்வாறே செய்கிறேன்.
- 21
இப்படியெல்லாம் செய்ய நாங்கள் வலுவற்றவர்களே! இது அவமானத்திற்குரிய ஒன்றுதான்! அவர்கள் எதில் பெருமை பாராட்டத் துணிகிறார்களோ அதில் நானும் பெருமைப்பாராட்டத் துணிந்து நிற்கிறேன். இப்போதும் ஓர் அறிவிலியைப் போன்றே பேசுகிறேன்.
- 22
அவர்கள் எபிரேயரா? நானும் தான்; அவர்கள் இஸ்ரயேலரா? நானும் தான்; அவர்கள் ஆபிரகாமின் வழிமரபினரா? நானும் தான்.
- 23
அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களா? நான் அவர்களைவிடச் சிறந்த பணியாளனே. இங்கும் நான் ஒரு மதியீனனாகவே பேசுகிறேன். நான் அவர்களை விட அதிகமாய்ப் பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன்.
- 24
ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள்.
- 25
மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்; ஒருமுறை கல்லெறிபட்டேன்; மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன்.
- 26
பயணங்கள் பல செய்தேன்; அவற்றில், ஆறுகளாலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன்.
- 27
பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண்விழித்தேன்; பசிதாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன்.
- 28
இவை தவிர எல்லாத் திருச்சபைகளையும் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது.
- 29
யாராவது வலுவற்றிருந்தால் நானும் அவரைப்போல் ஆவதில்லையா? யாராவது பாவத்தில் விழ நேர்ந்தால் என் உள்ளம் கொதிப்பதில்லையா?
- 30
நான் பெருமைபாராட்ட வேண்டுமென்றால் என் வலுவின்மையைப் பற்றியேதான் நான் பெருமை பாராட்ட வேண்டும்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.