Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗

DAILY MASS

Today’s
Readings

சனி, 19 ஜூன், 2027

பொதுக்காலம்

Optional Memorial · Saint Romuald, Abbot

← Previous day
Next day →

முதல் வாசகம்

கொரிந்தியருக்கு எழுதிய 2 திருமுகம் 12:1-10

  1. 1

    பெருமை பாராட்டுதல் பயனற்றதே. ஆயினும் பெருமை பாராட்ட வேண்டி இருப்பதால் ஆண்டவர் அருளிய காட்சிகளையும் வெளிப்பாடுகளையும் குறித்துப் பேசப் போகிறேன்.

  2. 2

    கிறிஸ்துவின் அடியான் ஒருவனை எனக்குத் தெரியும். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை மூன்றாம் வானம் வரை எடுத்துச் செல்லப்பட்டான். அவன் உடலோடு அங்குச் சென்றானா, உடலின்றி அங்குச் சென்றானா, யானறியேன். கடவுளே அதை அறிவார்.

  3. 3

    ஆனால் அம்மனிதன் பேரின்ப வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டான் என்பது எனக்குத் தெரியும். நான் மீண்டும் சொல்கிறேன்;

  4. 4

    அவன் உடலோடு அங்குச் சென்றானா அல்லது உடலின்றி அங்குச் சென்றானா யானறியேன். கடவுளே அதை அறிவார். அவன் அங்கே மனிதரால் உச்சரிக்கவும் சொல்லவும் முடியாத வார்த்தைகளைச் சொல்லக் கேட்டான்.

  5. 5

    இந்த ஆளைப் பற்றியே நான் பெருமை பாராட்டுவேன். என் வலுவின்மையே எனக்குப் பெருமை.

  6. 6

    அப்படி நான் பெருமை பாராட்ட விரும்பினாலும் அது அறிவீனமாய் இராது. நான் பேசுவது உண்மையாகவே இருக்கும். ஆயினும் என்னிடம் காண்பதையும் கேட்பதையும் விட உயர்வாக யாரும் என்னைக் கருதாதபடி நான் பெருமை பாராட்டாது விடுகிறேன்.

  7. 7

    எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள் போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப் போல் இருக்கிறது. நான் இறுமாப்படையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது.

  8. 8

    அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன்.

  9. 9

    ஆனால் அவர் என்னிடம்,"என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்"என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும்.

  10. 10

    ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல்கள் 34:8-9, 10-11, 12-13

  1. 8

    ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்.

  2. 9

    ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.

  3. 10

    சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது.

  4. 11

    வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன்.

  5. 12

    வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா?

  6. 13

    அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு!

தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.

நற்செய்தி

மத்தேயு நற்செய்தி 6:24-34

  1. 24

    எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.

  2. 25

    ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?

  3. 26

    வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!

  4. 27

    கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?

  5. 28

    உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.

  6. 29

    ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

  7. 30

    நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?

  8. 31

    ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.

  9. 32

    ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.

  10. 33

    ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.

  11. 34

    ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும.; அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்

தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.