முதல் வாசகம்
தொடக்க நூல் 18:1-15
- 1
பின்பு ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில்,
- 2
கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி,
- 3
"என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்தாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக!
- 4
இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள்.
- 5
கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்"என்றார்."நீ சொன்னபடியே செய்"என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.
- 6
அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி,"விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு"என்றார்.
- 7
ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச்சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான்.
- 8
பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும்பொழுது அவர்களருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தார்.
- 9
பின்பு அவர்கள் அவரை நோக்கி,"உன் மனைவி சாரா எங்கே?"என்று கேட்க, அவர்,"அதோ கூடாரத்தில் இருக்கிறாள்"என்று பதில் கூறினார்.
- 10
அப்பொழுது ஆண்டவர்;"நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன. அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்"என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
- 11
ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தனர். சாராவுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது.
- 12
எனவே, சாரா தமக்குள் சிரித்து,"நானோ கிழவி; என் தலைவரோ வயது முதிர்ந்தவர். எனக்கா இன்பம்?"என்றாள்.
- 13
அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி,"நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா"என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்? ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ!
- 14
இளவேனிற்காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன். அப்பொழுது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்"என்று சொன்னார்.
- 15
சாராவோ,"நான் சிரிக்கவில்லை"என்று சொல்லி மறுத்தார். ஏனெனில் அச்சம் அவரை ஆட்கொண்டது. அதற்கு ஆண்டவர்,"இல்லை, நீ சிரித்தாய்"என்றார்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.