முதல் வாசகம்
தொடக்க நூல் 18:16-33
- 16
அந்த மனிதர்கள் எழுந்து, அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமும் உடன்சென்று அவர்களை வழியனுப்பினார்.
- 17
அப்பொழுது ஆண்டவர்,"நான் செய்யவிருப்பதை ஆபிரகாமிடமிருந்து மறைப்பேனா?
- 18
ஆபிரகாமிடமிருந்தே வலிமைமிக்க மாபெரும் இனம் தோன்றும். அவன் மூலம் மண்ணுலகின் எல்லா இனத்தாரும் ஆசி பெற்றுக் கொள்வர்.
- 19
ஏனெனில், நீதி, நேர்மை வழி நின்று எனக்குக் கீழ்ப்படியும்படி தன் புதல்வருக்கும், தனக்குப்பின் தன் வழிமரபினருக்கும் கற்றுத்தருமாறு ஆண்டவராகிய நான் ஆபிரகாமுக்கு வாக்களித்ததை அவன் நிறைவேற்றுவான்"என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
- 20
ஆதலால் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி,"சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது.
- 21
என்னை வந்தடைந்த கண்டனக்குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்து கொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்"என்றார்.
- 22
அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார்.
- 23
ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது;"தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ?
- 24
ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ?
- 25
தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?"என்றார்.
- 26
அதற்கு ஆண்டவர்,"நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்"என்றார்.
- 27
அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக,"தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்துவிட்டேன்;
- 28
ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?"என்றார். அதற்கு அவர்,"நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்"என்றார்.
- 29
மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து,"ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?"என்று கேட்க, ஆண்டவர்,"நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்"என்றார்,
- 30
அப்பொழுது ஆபிரகாம்;"என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்? என, அவரும்"முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்"என்று பதிலளித்தார்.
- 31
அவர்,"என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத்துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?"என, அதற்கு அவர்,"இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்"என்றார்.
- 32
அதற்கு அவர்,"என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒரு வேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?"என, அவர்,"அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்"என்றார்.
- 33
ஆபிரகாமோடு பேசி முடித்தபின் ஆண்டவர் அவரை விட்டுச்சென்றார். ஆபிரகாமும் தம் இடத்திற்குத் திரும்பிச் சென்றார்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.