முதல் வாசகம்
எரேமியா 23:1-6
- 1
ஆண்டவர் கூறுவது; என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பவர்களுக்கு ஐயோ கேடு!
- 2
தம் மக்களை வழி நடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்; அதனைத் துரத்தியடித்தீர்கள்; அதனைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர்.
- 3
என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப் பட்டிக்குக் கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும்.
- 4
அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா; திகிலுறா; காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர்.
- 5
ஆண்; டவர் கூறுவது இதுவே; இதோ நாள்கள் வருகின்றன; அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள"தளிர்"தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார்.
- 6
அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும்."யாவே சித்கேனூ"என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.
பதிலுரைப் பாடல்
திருப்பாடல்கள் 23:1-3, 3-4, 5, 6
- 1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
- 2
பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
- 3
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
- 4
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.
- 5
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.
- 6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.
இரண்டாம் வாசகம்
எபேசியருக்கு எழுதிய திருமுகம் 2:13-18
- 13
ஒரு காலத்தில் தொலைவில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின்மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்.
- 14
ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார்.
- 15
பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார்.
- 16
தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார்.
- 17
அவர் வந்து, தொலைவில் இருந்த உங்களுக்கும், அங்கிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார்.
- 18
அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.
நற்செய்தி
மாற்கு நற்செய்தி 6:30-34
- 30
திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள்.
- 31
அவர் அவர்களிடம், நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்"என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
- 32
அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.
- 33
அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர்.
- 34
அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.