முதல் வாசகம்
எண்ணிக்கை 12:1-13
- 1
மோசே எத்தியோப்பியப் பெண்ணை மணந்திருந்தார்; அவர் மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினர்.
- 2
அவர்கள்,"ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? அவர் எங்கள் வழியாகவும் பேசவில்லையா?"என்றனர். ஆண்டவர் இதனைக் கேட்டார்.
- 3
பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் திகழ்ந்தார்.
- 4
உடனே ஆண்டவர் மோசே, ஆரோன், மிரியாம் ஆகியோரிடம்,"நீங்கள் மூவரும் சந்திப்புக் கூடாரத்தருகே வாருங்கள்"என்றார். அவர்கள் மூவரும் வந்தனர்.
- 5
மேகத்தூண் ஒன்றில் ஆண்டவர் இறங்கி வந்து கூடார வாயிலருகே நின்று ஆரோனையும் மிரியாமையும் அழைத்தார்; அவர்கள் இருவரும் முன் வந்தனர்.
- 6
அவர் கூறியது; என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள் இறைவாக்கினன் ஒருவன் இருந்தால் ஆண்டவராகிய நான் ஒரு காட்சியின் வழியாக அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன். கனவில் அவனோடு பேசுவேன்.
- 7
ஆனால் என்அடியான் மோசேயோடு அப்படியல்ல; என் வீடு முழுவதிலும் அவனே நம்பிக்கைக்குரியவன்;
- 8
நான் அவனோடு பேசுவது மறைபொருளாக அல்ல, நேர்முகமாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆண்டவர் உருவையும் அவன் காண்கிறான். பின்னர் ஏன் என் அடியான் மோசேக்கு எதிராகப் பேச நீங்கள் அஞ்சவில்லை?
- 9
மேலும் ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் மூண்டது; அவர் அகன்று சென்றார்.
- 10
கூடாரத்தின் மேலிருந்து மேகம் அகன்றதும் மிரியாமை பனிபோன்ற வெண்மையான தொழுநோய் பீடித்தது; ஆரோன் மிரியாம் பக்கம் திரும்பவே அவள் தொழுநோயாளியாயிருக்கக் கண்டார்.
- 11
ஆரோன் மோசேயிடம்,"என் தலைவரே! அறிவீனமாக நாங்கள் செய்த பாவத்தை எங்கள்மேல் சுமத்த வேண்டாம்;
- 12
தாயின் வயிற்றிலிருந்து செத்துப் பிறந்த அரைகுறைக்குழந்தை போன்று இவள் ஆகாதிருக்கட்டும்"என்றார்.
- 13
மோசே ஆண்டவரிடம் முறையிட்டு,"கடவுளே, இவளைக் குணமாக்க வேண்டுகிறேன்"என்றார்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.