முதல் வாசகம்
எண்ணிக்கை 20:1-13
- 1
முதல் மாதத்தில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சீன் பாலைநிலத்துக்கு வந்தது; மக்கள் காதேசில் தங்கினர். மிரியாம் அங்கே இறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டாள்.
- 2
அப்போது மக்கள் கூட்டமைப்புக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக ஒன்று கூடினர்.
- 3
மக்கள் மோசேயுடன் வாதாடிக் கூறியது;"ஆண்டவர் திருமுன் எங்கள் சகோதரர்கள் மாண்டபோது நாங்களும் மாண்டிருந்தால் நலமாயிருந்திருக்குமே!
- 4
ஆண்டவரின் சபையை இந்தப் பாலைநிலத்துக்கு நீங்கள் கொண்டு வந்தது ஏன்? நாங்களும் எங்கள் கால்நடைகளும் இங்குச் சாகவேண்டுமென்றா?
- 5
இந்தக் கொடிய இடத்துக்கு அழைத்துவர, எங்களை எகிப்திலிருந்து வெளியேறப் பண்ணினது ஏன்? தானிய நிலம், அத்தி மரங்கள், திராட்சைக் கொடிகள், மாதுளைச் செடிகள் எவையுமே இங்கு இல்லை; குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லையே!"
- 6
பின், மோசேயும் ஆரோனும் சபைக்கு முன்னின்று சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலுக்குச் சென்று முகங்குப்புற விழுந்தனர். ஆண்டவரின் மாட்சி அவர்களுக்குத் தோன்றியது.
- 7
ஆண்டவர் மோசேயிடம்,
- 8
"கோலை எடுத்துக் கொள்; நீயும் உன் சகோதரன் ஆரோனும் மக்கள் கூட்டமைப்பைக் கூடிவரச் செய்யுங்கள்; அவர்கள் பார்வையில் பாறைத் தண்ணீரைத் தரும்படி அதனிடம் பேசுங்கள்; இவ்வாறு அவர்களுக்காகப் பாறையிடமிருந்து நீங்கள் தண்ணீர் பெறுவீர்கள்; மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் கால்நடைகளுக்கும் குடிக்கக் கொடுப்பீர்கள்"என்றார்.
- 9
அவர் கட்டளைப்படியே மோசே ஆண்டவர் திருமுன்னின்று கோலை எடுத்தார்.
- 10
மோசேயும் ஆரோனும் பாறைக்கு முன்பாகச் சபையை ஒன்று கூட்டினர். மோசே அவர்களிடம்,"கலகக்காரரே, இப்போது கேளுங்கள், இப்பாறையிலிருந்து உங்களுக்குத் தண்ணீர் வரவழைக்க எங்களால் கூடுமா?"என்று கேட்டார்.
- 11
பின் மோசே தம் கையை ஓங்கித் தம் கோலால் பாறையை இருமுறை அடித்தார்; தண்ணீர் தாராளமாக வந்தது, மக்கள் கூட்டமைப்பினரும் அவர்கள் கால்நடைகளும் குடித்தனர்.
- 12
ஆண்டவரோ மோசேயிடமும் ஆரோனிடமும்,"இஸ்ரயேல் மக்கள் பார்வையில் நான் தூயவராக விளங்கும்படி நீங்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாமல் போனதால் இந்தச் சபையை நான் அவர்களுக்குக்கொடுக்கவிருக்கும் நாட்டில் கொண்டு சேர்க்க மாட்டீர்கள்"என்றார்.
- 13
இது மெரிபாவின் தண்ணீர்; இங்குத்தான் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் வாதாடினர், அவர் அவர்களிடையே தம்மைத் தூயவராகக் காண்பித்தார்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.