முதல் வாசகம்
இணைச் சட்டம் 10:12-22
- 12
எனவே இஸ்ரயேலரே, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவர்தம் அனைத்து வழிகளிலும் நடந்து, அவர் மீது அன்புகூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்குப் பணிபுரிந்து,
- 13
உங்களுக்கு எல்லாம் நலமாகும் பொருட்டு நான் இன்று கற்பிக்கின்ற அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதன்றி, அவர் உங்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கின்றார்?
- 14
விண்ணும் விண்ணின் வானங்களும், மண்ணும் அதில் உள்ள அனைத்தும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியன.
- 15
இருப்பினும், உங்கள் மூதாதையரின்மீது பற்றுவைத்து அன்பு கூர்ந்தார். அவர்களுக்குப்பின் அவர்களுடைய வழிமரபினராகிய உங்களை எல்லா மக்களினங்களினின்றும், இந்நாளில் இருப்பதுபோலத் தெரிந்துகொண்டார்.
- 16
ஆகவே, உங்கள் உள்ளத்தை விருத்த சேதனம் செய்யுங்கள். வணங்காக் கழுத்தினராய் இராதீர்கள்.
- 17
ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவாக்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுததற்குரிய கடவுள் அவரே. அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை; கையூட்டு வாங்குவதும் இல்லை.
- 18
அனாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அன்னியர்மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே.
- 19
அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்.
- 20
உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சுங்கள்; அவருக்கே பணிபுரிந்து அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். அவர் பெயராலே ஆணையிடுங்கள்.
- 21
அவரே உங்கள் புகழ்ச்சி! அவரே உங்கள் கடவுள்! உங்கள் கண்கள் கண்ட ஆற்றல்மிகு அச்செயல்களை உங்களுக்காகச் செய்தவர் அவரே.
- 22
உங்கள் மூதாதையர் எழுபது ஆள்களாய் எகிப்துக்குப் போனார்கள். இப்பொழுதோ உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வானத்து விண்மீன்கள் போல் பெருகச் செய்துள்ளார்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.