முதல் வாசகம்
நீதித் தலைவர்கள் 9:6-15
- 6
செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்கள் அனைவரும் செக்கேமில்"சிலைத்தூண் கருவாலி"மரத்தடியில் அபிமெலக்கை அரசனாக ஏற்படுத்தினர்.
- 7
இது யோத்தாமுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கெரிசிம் மலைக்கு ஏறிச் சென்று அதன் உச்சியில் நின்று கொண்டு உரத்த குரலில் கூப்பிட்டுக் கூறியது;"செக்கேமின் மக்களே, எனக்குச் செவிசாயுங்கள்; கடவுள் உங்களுக்குச் செவி கொடுப்பார்.
- 8
மரங்கள், தங்களுக்கு ஓர் அரசனைத் திருப்பொழிவு செய்யப் புறப்பட்டன. அவை ஒலிவ மரத்திடம்,"எங்களை அரசாளும்"என்று கூறின.
- 9
ஒலிவ மரம் அவற்றிடம்,"எனது எண்ணெயால் தெய்வங்களும் மானிடரும் மதிப்புப் பெறுகின்றனர். அப்படியிருக்க அதை உற்பத்தி செய்வதை நான் விட்டுக் கொடுத்து மரங்களுக்கு மேல் அசைந்தாட வருவேனா?"என்றது.
- 10
மரங்கள் அத்தி மரத்திடம்,"வாரும், எங்களை அரசாளும்"என்றன.
- 11
அத்தி மரம் அவற்றிடம்,"எனது இனிமையையும் நல்ல பழத்தையும் விட்டுவிட்டு, மரங்கள் மீது அசைந்தாட வருவேனா?"என்றது.
- 12
மரங்கள் திராட்சைக் கொடியிடம்,"வாரும், எங்களை அரசாளும்"என்றன.
- 13
திராட்சைக் கொடி அவற்றிடம்,"தெய்வங்களையும் மானிடரையும் மகிழ்விக்கும் எனது திராட்சை இரசத்தை விட்டுவிட்டு மரங்கள்மேல் அசைந்தாட வருவேனா?"என்றது.
- 14
மரங்கள் எல்லாம் முட்புதரிடம்,"வாரும், எங்களை அரசாளும்"என்றன.
- 15
முட்புதர் மரங்களிடம்,"உண்மையில், உங்கள் மீது ஆட்சி செய்ய நீங்கள் என்னைத் திருப்பொழிவு செய்தால், வாருங்கள்; என் நிழலில் அடைக்கலம் புகுங்கள்; இல்லையேல், முட்புதரான என்னிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து லெபனோனின் கேதுரு மரங்களை அழித்துவிடும்"என்றது.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.