முதல் வாசகம்
யோசுவா 24:1-2a, 15-17, 18b
- 1
செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதிகாரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர்.
- 2
யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது;"இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;"முற்காலத்தில் ஆபிரகாம், நாகோர் ஆகியோரின் தந்தை தேரா உட்பட்ட உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் வாழ்ந்தபொழுது அவர்கள் மற்ற தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர்.
- 15
ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.
- 16
மக்கள் மறுமொழியாக,"ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக!
- 17
ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார்.
- 18
ஆண்டவர் எல்லா மக்களையும், இந்நாட்டில் வாழ்ந்த எமோரியரையும் எங்கள் முன்னிருந்து விரட்டினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்"என்றனர்.
வாசக எழுத்துக்குறி ஒரு வசனத்தின் பகுதியைக் குறிக்கும். இங்கே முழு வசனம் காட்டப்படுகிறது.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.