- 4
பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் அவரிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது;
- 5
"விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.
- 6
வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின.
- 7
மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கிவிட்டன.
- 8
இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன."இவ்வாறு சொன்னபின்,"கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்"என்று உரக்கக் கூறினார்.
- 9
இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர்.
- 10
அதற்கு இயேசு கூறியது;"இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே"அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்துகொள்வதில்லை."
- 11
"இந்த உவமையின் பொருள் இதுவே; விதை, இறைவார்த்தை.
- 12
வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது.
- 13
பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்; சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள்.
- 14
முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.
- 15
நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.