முதல் வாசகம்
யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு 7:2-4, 9-14
- 2
கதிரவன் எழும் திலையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வானதூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து,
- 3
"எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்"என்று அவர்களிடம் கூறினார்.
- 4
முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கைப்பற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப்பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம்.
- 9
இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைக் பிடித்திருந்தார்கள்.
- 10
அவர்கள்,"அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக் குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது"என்று உரத்த குரலில் பாடினார்கள்.
- 11
அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள்.
- 12
"ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்"என்று பாடினார்கள்.
- 13
மூப்பர்களுள் ஒருவர்,"வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?"என்று என்னை வினவினார்.
- 14
நான் அவரிடம்,"என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்"என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது;"இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.