முதல் வாசகம்
எசாயா 45:6c-8, 18, 21c-25
- 6
கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்; நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை.
- 7
நான் ஒளியை உண்டாக்குகிறேன்; இருளைப் படைக்கிறேன்; நல் வாழ்வை அமைப்பவன் நான்; தீமையைப் படைப்பவனும் நானே; இவை அனைத்தையும் செய்யும் ஆண்டவர் நானே.
- 8
வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்; மண்ணுலகம் வாய்திறந்து விடுதலைக்கனி வழங்கட்டும், அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்; இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே.
- 18
ஏனெனில் விண்ணுலகைப் படைத்த ஆண்டவர் கூறுவது இதுவே; அவரே கடவுள்; மண்ணுலகைப் படைத்து உருவாக்கியவர் அவரே; அதை நிலைநிறுத்துபவரும் அவரே; வெறுமையாய் இருக்குமாறு படைக்காது, மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார். நானே ஆண்டவர், என்னையன்றி வேறு எவரும் இல்லை.
- 21
அறிவியுங்கள்; உங்கள் வழக்கை எடுத்துரையுங்கள்; ஒன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள்; தொடக்கத்திலிருந்து இதை வெளிப்படுத்தியவர் யார்? முதன் முதலில் இதை அறிவித்தவர் யார்? ஆண்டவராகிய நான் அல்லவா? என்னையன்றிக் கடவுள் வேறு எவரும் இல்லை; நீதியுள்ளவரும் மீட்பு அளிப்பவருமான இறைவன் என்னையன்றி வேறு எவரும் இல்லை.
- 22
மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே! என்னிடம் திரும்பி வாருங்கள்; விடுதலை பெறுங்கள்; ஏனெனில் நானே இறைவன்; என்னையன்றி வேறு எவருமில்லை.
- 23
நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்; என் வாயினின்று நீதிநிறை வாக்கு புறப்பட்டுச் சென்றது; அது வீணாகத் திரும்பி வராது; முழங்கால் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும்; நா அனைத்தும் என்மேல் ஆணையிடும்.
- 24
"ஆண்டவரில் மட்டும் எனக்கு நீதியும் ஆற்றலும் உண்டு"என்று ஒவ்வொருவனும் சொல்லி அவரிடம் வருவான்; அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர் அனைவரும் வெட்கக்கேடு அடைவர்.
- 25
இஸ்ரயேலின் வழி மரபினர் அனைவரும் ஆண்டவரால் ஏற்புடையோராகப் பெற்று அவரைப் போற்றுவர்.
வாசக எழுத்துக்குறி ஒரு வசனத்தின் பகுதியைக் குறிக்கும். இங்கே முழு வசனம் காட்டப்படுகிறது.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.