அதிகாரம்
1 மக்கபேயர் 1
- 1
மாசிடோனியராகிய பிலிப்புமகன் அலக்சாண்டர் முதலில் கிரேக்க நாட்டை ஆண்டுவந்தார்; பின்னர் கித்திம் நாட்டினின்று புறப்பட்டுப் பாரசீகருடையவும் மேதியருடையவும் மன்னரான தாரியுவை வென்று அவருக்குப் பதிலாக ஆட்சிபுரிந்தார்.
- 2
அவர் போர்கள் பல புரிந்து, கோட்டைகள் பல பிடித்து, மண்ணுலகின் மன்னர்களைக் கொலைசெய்தார்.
- 3
மண்ணுலகின் கடையெல்லைவரை முன்னேறிச் சென்று பல நாடுகளைக் கொள்ளையடித்தார்; மண்ணுலகு முழுவதும் அவரது ஆட்சியில் அமைதியாக இருந்தபோது அவர் தம்மையே உயர்வாகக் கருதினார்; அவரது உள்ளம் செருக்குற்றது.
- 4
ஆகவே அவர் வலிமைமிக்க படையைத் திரட்டிப் பல மாநிலங்கள், நாடுகள், மன்னர்கள்மீது ஆட்சிசெலுத்திவந்தார். அவர்களும் அவருக்குத் திறை செலுத்தி வந்தார்கள்.
- 5
அதன்பிறகு அவர் கடின நோயுற்றுத் தாம் சாகவிருப்பதை உணர்ந்தார்.
- 6
ஆதலால் இளமைமுதல் தம்முடன் வளர்க்கப்பெற்றவர்களும் மதிப்புக்குரியவர்களுமான அலுவலர்களை அழைத்து, தாம் உயிரோடு இருந்தபோதே தம் பேரரசை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.
- 7
அலக்சாண்டர் பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சிசெய்த பின் இறந்தார்.
- 8
அலக்சாண்டருடைய அலுவலர்கள் தங்களுக்குரிய இடங்களில் ஆட்சி செலுத்தத் தொடங்கினார்கள்.
- 9
அவர் இறந்தபின் அவர்கள் எல்லாரும் முடி சூடிக்கொண்டார்கள். அவர்களுக்குப்பின் அவர்களின் மைந்தர்களும் பல ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். அவர்களால் மண்ணுலகெங்கும் தீமைகள் பெருகின.
- 10
அவர்கள் நடுவிலிருந்து பொல்லாத வழிமரபினன் ஒருவன் தோன்றினான்; அவன் மன்னர் அந்தியோக்கின் மகன் அந்தியோக்கு எப்பிபான் ஆவான்; முன்பு உரோமையில் பிணைக் கைதியாக இருந்த அவன் கிரேக்கப் பேரரசின் நூற்று முப்பத்தேழாம் ஆண்டு ஆட்சி செய்யத் தொடங்கினான்.
- 11
அக்காலத்தில் இஸ்ரயேலில் தீநெறியாளர் சிலர் தோன்றி,"வாருங்கள், நம்மைச் சுற்றிலும் இருக்கும் வேற்றினத்தாரோடு நாம் உடன்படிக்கை செய்துகொள்வோம்; ஏனெனில் நாம் அவர்களைவிட்டுப் பிரிந்ததிலிருந்து நமக்குப் பல வகைக் கேடுகள் நேர்ந்துள்ளன"என்று கூறி, மக்கள் அனைவரையும் தவறான வழியில் செல்லத் தூண்டினார்.
- 12
இது அவர்களுக்கு ஏற்படையதாய் இருந்தது.
- 13
உடனே மக்களுள் சிலர் ஆர்வத்தோடு மன்னனிடம் சென்றனர். அவர்கள் கேட்டதற்கு இணங்க, வேற்றினத்தாரின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு அவன் அவர்களுக்கு உரிமை அளித்தான்.
- 14
வேற்றினத்தாருடைய பழக்கவழக்கத்திற்கு ஏற்ப அவர்கள் எருசலேமில் உடற்பயிற்சிக்கூடம் ஒன்று ஏற்படுத்தினார்கள்;
- 15
விருத்தசேதனத்தின் அடையாளத்தை மறைத்து, தூய உடன்படிக்கையை விட்டுவிட்டு, வேற்றினத்தாரோடு கலந்து, எல்லாவகைத் தீமைகளையும் செய்தார்கள்.
- 16
அந்தியோக்கு தன் சொந்த நாட்டில் ஆட்சியை நிலைநாட்டிய பின், இரு நாடுகளுக்கு மன்னனாகும் எண்ணத்துடன் எகிப்திலும் ஆட்சிபுரிய விரும்பினான்;
- 17
ஆதலால் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, பெரும் கப்பற்படை அடங்கிய வலிமைமிக்க படைத்திரளோடு எகிப்து நாட்டில் புகுந்தான்.
- 18
எகிப்து மன்னனான தாலமியோடு அவன் போர் தொடுக்கவே, தாலமி அவனுக்கு அஞ்சிப் புறமுதுகு காட்டி ஓடினான்; அவனுடைய வீரர்களுள் பலர் வெட்டுண்டு மடிந்தனர்.
- 19
எகிப்து நாட்டின் அரண்சூழ் நகர்கள் பல பிடிபட்டன. அந்தியோக்கு எகிப்திலிருந்து கொள்ளைப் பொருள்களை எடுத்துச் சென்றான்.
- 20
நூற்று நாற்பத்து மூன்றாம் ஆண்டில் அந்தியோக்கு எகிப்தை வென்று திரும்புகையில் வலிமைமிக்க படையோடு இஸ்ரயேலைத் தாக்கி எருசலேமை அடைந்தான்;
- 21
அகந்தையோடு திருஉறைவிடத்திற்குள் புகுந்து, பொற்பீடம், விளக்குத்தண்டு, அதோடு இணைந்தவை,
- 22
காணிக்கை அப்பமேசை, நீர்மப் படையலுக்கான குவளைகள், கிண்ணங்கள், பொன் தூபக் கிண்ணங்கள், திரை, பொன் முடிகள், கோவில் முகப்பில் இருந்த பொன் அணிகலன்கள் ஆகிய அனைத்தையும் சூறையாடினான்;
- 23
வெள்ளியையும் பொன்னையும் விலையுயர்ந்த கலன்களையும் கைப்பற்றினான்; ஒளித்து வைத்திருந்த செல்வங்களையும் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டான்;
- 24
இஸ்ரயேலில் பலரைக் கொன்று குவித்தபின், கொள்ளைப் பொருள்களோடு தன் நாடு திரும்பினான்; தன் செயல்கள்பற்றிப் பெருமையாகப் பேசிவந்தான்.
- 25
இஸ்ரயேல் மக்கள் தாங்கள் வாழ்ந்த எல்லா இடங்களிலும் இஸ்ரயேலைக் குறித்து அழுது புலம்பினார்கள்.
- 26
தலைவர்களும் மூப்பர்களும் அழுது அரற்றினார்கள்; கன்னிப்பெண்களும் இளைஞர்களும் நலிவுற்றார்கள்; பெண்கள் அழகுப்பொலிவினை இழந்தார்கள்.
- 27
மணமகன் ஒவ்வொருவனும் புலம்பி அழுதான்; மணவறையில் இருந்த மணமகள் ஒவ்வொருத்தியும் வருந்தி அழுதாள்.
- 28
தன் குடிமக்கள் பொருட்டு நாடே நடுநடுங்கியது; யாக்கோபின் வீடே வெட்கித் தலைகுனிந்தது.
- 29
இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மன்னன் வரி தண்டுவதற்காக ஒருவனை யூதேயாவின் நகரங்களுக்கு அனுப்பி வைத்தான். அவன் பெரும் படையோடு எருசலேம் சேர்ந்தான்.
- 30
அமைதிச் செய்தியுடன் தான் வந்திருப்பதாக அவன் எருசலேம் மக்களிடம் நயவஞ்சகமாகக் கூறி, அவர்களது நம்பிக்கையைப் பெற்றான். ஆனால் அவன் திடீரென்று நகர்மீது பாய்ந்து கடுமையாகத் தாக்கி, அவர்களுள் பலரைக் கொன்றான்;
- 31
நகரைக் கொள்ளையடித்துத் தீக்கரையாக்கி, வீடுகளையும் சுற்று மதில்களையும் தகர்த்தெறிந்தான்.
- 32
அவனும் அவனுடைய வீரர்களும் பெண்களையும் பிள்ளைகளையும் நாடு கடத்திக் கால் நடைகளைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள்;
- 33
தாவீதின் நகரில் உயர்ந்த, உறுதியான மதில்களையும் வலுவான காவல்மாடங்களையும் கட்டியெழுப்பி, அதைத் தங்கள் கோட்டையாக்கிக் கொண்டார்கள்;
- 34
தீநெறியாளர்களான பொல்லாத மக்களினத்தை அங்குக் குடியேற்றினார்கள்; இவ்வாறு தங்கள் நிலையை வலுப்படுத்தினார்கள்;
- 35
படைக்கலன்களையும் உணவுப்பொருள்களையும் அங்குச் சேர்த்து வைத்தார்கள்; எருசலேமில் கொள்ளையடித்த பொருள்களை ஒன்று திரட்டி வைத்தார்கள்; இதனால் இஸ்ரயேலருக்குப் பேரச்சம் விளைவித்து வந்தார்கள்.
- 36
அந்தக்கோட்டை, திருஉறைவிடத்தைத் தாக்குவதற்கு ஏற்ற பதுங்கிடமாக அமைந்தது; இஸ்ரயேலுக்குக் கொடிய எதிரியாகத் தொடர்ந்து இருந்தது.
- 37
அவர்கள் திருஉறைவிடத்தைச் சுற்றிலும் மாசற்ற குருதியைச் சிந்தினார்கள்; திருஉறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.
- 38
அவர்களை முன்னிட்டு எருசலேமின் குடிகள் அதைவிட்டு ஓடிவிட்டார்கள். எருசலேம் அன்னியரின் குடியிருப்பு ஆயிற்று; தன் குடிகளுக்கோ அன்னியமானது. அதன் மக்கள் அதனைக் கைவிட்டார்கள்.
- 39
அதன் திருஉறைவிடம் பாழடைந்து பாலைநிலம்போல் ஆயிற்று; திருநாள்கள் துயர நாள்களாக மாறின; ஓய்வுநாள்கள் பழிச்சொல்லுக்கு உள்ளாயின; அதன் பெருமை இகழ்ச்சிக்கு உட்பட்டது.
- 40
அதன் மாட்சியின் அளவுக்கு மானக்கேடும் மிகுந்தது; அதன் பெருமை புலம்பலாக மாறியது.
- 41
எல்லாரும் ஒரே மக்களினமாய் இருக்கவேண்டும் என்றும், தனிப்பட்ட பழக்கவழக்கங்களைக் கைவிடவேண்டும் என்றும்
- 42
அந்தியோக்கு மன்னன் தன் பேரரசு முழுவதிலும் ஆணை பிறப்பித்தேன். மன்னனின் கட்டளைப்படி நடக்கப் பிற இனத்தார் அனைவரும் இசைந்தனர்.
- 43
இஸ்ரயேலருள் பலர் மன்னனுடைய வழிபாட்டுமுறைகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டனர்; சிலைகளுக்குப் பலியிட்டனர்; ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தினர்.
- 44
மன்னன் தன் தூதர்கள் வழியாக எருசலேமுக்கும் யூதாவின் நகரங்களுக்கும் மடல்களை அனுப்பி வைத்தான்; யூதர்கள் தங்கள் நாட்டு மரபுக்குப் புறம்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றவேண்டும்;
- 45
எரிபலிகளோ மற்றப் பலிகளோ நீர்மப் படையல்களோ திருஉறைவிடத்தில் நிகழ்வதைத் தடுக்க வேண்டும்; ஓய்வுநாள்களையும் திருவிழாக்களையும் தீட்டுப்படுத்த வேண்டும்;
- 46
திருஉறைவிடத்தையும் அதைச் சேர்ந்த தூய பொருள்களையும் கறைப்படுத்த வேண்டும்;
- 47
பிற இனத்தாரின் பலிபீடங்கள், கோவில்கள், சிலைவழிபாட்டுக்குரிய இடங்கள் ஆகியவற்றைக் கட்டியெழுப்ப வேண்டும்; பன்றிகளையும் தீட்டுப்பட்ட விலங்ககளையும் பலியிடவேண்டும்;
- 48
அவர்கள் தங்கள் திருச்சட்டத்தை மறந்து, தங்கள் விதிமுறைகளையும் மாற்றிக்கொள்ளும் பொருட்டு, தங்கள் மைந்தர்களுக்கு விருத்தசேதனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்;
- 49
தங்களை எல்லாவகை மாசுகளாலும் தீட்டுகளாலும் அருவருப்புக்குரியோர் ஆக்கிக்கொள்ள வேண்டும்.
- 50
மன்னனின் கட்டளைப்படி நடவாதவர்கள் சாவார்கள்.
- 51
மன்னன் இந்த கட்டளைகளையெல்லாம் எழுதித் தன் பேரரசு முழுவதற்கும் அனுப்பி வைத்தான்; இவற்றை மக்கள் எல்லாரும் செயல்படுத்த மேற்பார்வையாளரை ஏற்படுத்தினான்; யூதாவின் நகரங்கள் ஒவ்வொன்றும் பலியிடவேண்டும் என்று கட்டளையிட்டான்.
- 52
மக்களுள் பலர், அதாவது திருச்சட்டத்தைப் புறக்கணித்தோர் அனைவரும் அந்த மேற்பார்வையாளர்களோடு சேர்ந்துகொண்டனர்; நாட்டில் தீமைகள் செய்தனர்;
- 53
இஸ்ரயேலர் தங்களுக்கு இருந்த எல்லாப் புகலிடங்களையும் நோக்கி ஓடி ஒளிந்து கொள்ளக் கட்டாயப்படுத்தினர்.
- 54
நூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டு கிஸ்லேவு மாதம் பதினைந்தாம் நாள் அந்தியோக்கும் அவனுடைய ஆள்களும் பலிபீடத்தின் மேல் நடுங்க வைக்கும் தீட்டை நிறுவினார்கள்; யூதேயாவின் நகரங்களெங்கும் சிலை வழிபாட்டுக்கான பீடங்களைக் கட்டினார்கள்;
- 55
வீட்டுக் கதவுகளுக்கு முன்பும் வீதிகளிலும் தூபம் காட்டினார்கள்;
- 56
தங்கள் கண்ணில் பட்ட திருச்சட்ட நூல் ஒவ்வொன்றையும் கிழித்து நெருப்பிலிட்டு எரித்தார்கள்.
- 57
எவரிடம் உடன்படிக்கை நூல் காணப்பட்டதோ, யார் திருச்சட்டத்தின்படி நடந்துவந்தார்களோ அவர்கள் அனைவரும் கொல்லப்படவேண்டும் என்பது மன்னனது கட்டளை.
- 58
இவ்வாறு ஒவ்வொரு மாதமும் நகரங்களில் காணப்பட்ட இஸ்ரயேலருக்கு எதிராக அவர்கள் வன்முறையைப் பயன்படுத்தினார்கள்;
- 59
எரிபலிபீடத்தின்மேல் அமைக்கப்பட்டிருந்த சிலைவழிபாட்டுப் பீடத்தின்மீது ஒவ்வொரு மாதமும் இருபத்தைந்தாம் நாள் பலியிடுவார்கள்;
- 60
தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்வித்த பெண்களை மன்னனின் கட்டளைப்படி கொன்றார்கள்.
- 61
பிள்ளைகளை அவர்களுடைய அன்னையரது கழுத்தில் கட்டித் தொங்க விட்டார்கள்; அவர்களின் குடும்பத்தினரையும் அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தவர்களையும் கொலைசெய்தார்கள்.
- 62
எனினும் இஸ்ரயேலருள் பலர் உறுதியாய் இருந்தனர்; தூய்மையற்ற உணவுப்பொருள்களை உண்பதில்லை என்று தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்;
- 63
உணவுப்பொருள்களால் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்வதைவிட, தூய உடன்படிக்கையை மாசுபடுத்துவதைவிடச்சாவதே சிறந்தது என்று கருதினர்; அவ்வாறே இறந்தனர்.
- 64
இவ்வாறு இஸ்ரயேல் மீது பேரிடர் வந்துற்றது.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.