Fr. Arockia Ramesh
EN|தமிழ்Let's Connect ↗
← Bible

CHAPTER

1 சாமுவேல் 16

  1. 1

    கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.

  2. 2

    அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப் போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி,

  3. 3

    ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார்.

  4. 4

    கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள்.

  5. 5

    அதற்கு அவன்: சமாதானந்தான்; கர்த்தருக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, என்னுடனேகூடப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவன் குமாரரையும் பரிசுத்தம்பண்ணி, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான்.

  6. 6

    அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுபவன் இவன்தானாக்கும் என்றான்.

  7. 7

    கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

  8. 8

    அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான்.

  9. 9

    ஈசாய் சம்மாவையும் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான்.

  10. 10

    இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழுபேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்து போகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி;

  11. 11

    உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான்.

  12. 12

    ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்தமேனியும், அழகிய கண்களும், நல்ல ரூபமுமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர்: இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார்.

  13. 13

    அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.

  14. 14

    கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.

  15. 15

    அப்பொழுது சவுலின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி உம்மைக் கலங்கப்பண்ணுகிறதே.

  16. 16

    சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள்.

  17. 17

    சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத் தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.

  18. 18

    அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான்.

  19. 19

    அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டுமந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச்சொன்னான்.

  20. 20

    அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின்மேல் ஏற்றி, தன் குமாரனாகிய தாவீதின் வசமாய் சவுலுக்கு அனுப்பினான்.

  21. 21

    அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் சிநேகித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான்.

  22. 22

    சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி, தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என் கண்களில் அவனுக்குத் தயவுகிடைத்தது என்று சொல்லச்சொன்னான்.

  23. 23

    அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து, சொஸ்தமாவான்.

Tamil Old Version · public-domain text

← Previous chapterNext chapter →