அதிகாரம்
2 மக்கபேயர் 1
- 1
"எகிப்து நாட்டில் உள்ள தங்கள் யூத உறவின் முறையினருக்கு எருசலேமிலும் யூதேயா நாட்டிலும் உள்ள யூத உறவின்முறையினர் நலனும் அமைதியும் பெருக வாழ்த்தி எழுதுவது;
- 2
கடவுள் உங்களுக்கு நன்மை செய்து, நம்பிக்கைக்குரிய தம் அடியார்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவு கூர்வாராக!
- 3
தம்மை வழிபடவும் தமது திருவுளத்தைப் பரந்த உள்ளத்தோடும் தாராள மனத்தோடும் நிறைவேற்றவும் வேண்டிய இதயத்தை உங்கள் அனைவருக்கும் அளிப்பாராக!
- 4
தம்முடைய திருச்சட்டம், கட்டளைகளைப் பொறுத்தவரை உங்களுக்குத் திறந்த உள்ளத்தையும் அமைதியையும் அருள்வாராக!
- 5
உங்கள் மன்றாட்டுக்குச் செவிசாய்ப்பாராக; உங்களோடு ஒப்புரவுசெய்து, இடுக்கண் வேளையில் உங்களைக் கைவிடாதிருப்பாராக!
- 6
இப்போது நாங்கள் இங்கு உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டு வருகிறோம்."
- 7
"தெமேத்திரி மன்னரது ஆட்சியில், நூற்று அறுபத்தொன்பதாம் ஆண்டில் யாசோனும் அவனுடைய தோழர்களும் தூய நாட்டுக்கும் அதன் ஆட்சிக்கும் எதிராகத் துரோகம் செய்து, கோவில் வாயிலைத் தீக்கிரையாக்கி மாசற்ற குருதியைச் சிந்திய காலத்துக்குப்பின் எங்களுக்கு ஏற்பட்ட இன்னல் இடையூறுகளின்போது நாங்கள் உங்களுக்கு எழுதினோம்;
- 8
ஆண்டவரிடம் மன்றாடினோம். எங்கள் மன்றாட்டு கேட்கப்பட்டது. நாங்கள் பலியும் உணவுப் படையலும் ஒப்புக்கொடுத்தோம்; விளக்கேற்றினோம்; அப்பம் படைத்தோம்.
- 9
எனவே நீங்கள் கிஸ்லேவ் மாதம் கூடாரத் திருவிழாவைக் கொண்டாடக் கருத்தாயிருங்கள். நூற்று எண்பத்தெட்டாம் ஆண்டு இது எழுதப்பெற்றது."
- 10
"தாலமி மன்னரின் ஆசிரியரும் திருப்பொழிவு பெற்ற குருக்கள் வழிமரபில் தோன்றியவருமான அரிஸ்தோபுலுக்கும் எகிப்தில் உள்ள யூதர்களுக்கும் எருசலேம் மக்களும் யூதேயாவின் குடிகளும் ஆட்சிக் குழுவினரும் யூதாவும் நலம்பெற வாழ்த்தி எழுதுவது;
- 11
மன்னருக்கு எதிராக எம் பக்கம் நின்று, பேரிடர்களிலிருந்து எங்களைக் காப்பாற்றிய கடவுளுக்குப் பெரிதும் நன்றி நவில்கிறோம்;
- 12
ஏனெனில் அவர் திருநகருக்கு எதிராகப் போரிட்டவர்களை விரட்டியடித்தார்.
- 13
வெல்லற்கரியதாய்த் தோன்றிய தம் படையோடு அந்தியோக்கு பாரசீகத்தில் நுழைந்தபோது, நானயா என்னும் தேவதையின் அர்ச்சகர்கள் சூழ்ச்சிசெய்து கோவிலிலேயே அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.
- 14
அந்தியோக்கு அத்தேவதையை மணமுடிக்கும் பாவனையில் கோவிலின் திரளான செல்வத்தைச் சீர்வரிசையாகப் பெறுவதற்காகத் தம் நண்பர்களோடு அங்குச் சென்றார்.
- 15
நானயாவின் அர்ச்சர்கள் செல்வத்தை வெளியே எடுத்துவைத்தபொழுது, அந்தியோக்கு தம் நண்பர்கள் சிலரோடு கோவில் முற்றத்தினுள் நுழைந்தார். அவர் நுழைந்ததும் அர்ச்சகர்கள் கோவிலை அடைத்தார்கள்.
- 16
மேல்தட்டில் மறைவாக இருந்த கதவைத் திறந்து கற்களை எறிந்து மன்னரைத் தாக்கினார்கள்; அவரையும் அவருடைய ஆள்களையும் துண்டு துண்டாக்கித் தலைகளையும் வெட்டி வெளியே நின்றுகொண்டிருந்தவர்கள்முன் வீசியெறிந்தார்கள்.
- 17
இறைப்பற்றில்லாதவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கிய நம் கடவுள் எல்லாவற்றிலும் போற்றப்படுவாராக."
- 18
"கிஸ்லேவ் மாதம் இருபத்தைந்தாம் நாள் கோவிலின் தூய்மைப் பாட்டு விழாவை நாங்கள் கொண்டாடவிருக்கிறோம்; நெகேமியா கோவிலையும் பலிபீடத்தையும் மீண்டும் கட்டி எழுப்பிப் பலிசெலுத்திய வேளையில் தோன்றிய நெருப்பை நினைவுகூரும் கூடாரத் திருவிழாவை நீங்களும் கொண்டாடுமாறு உங்களுக்கு இதை அறிவிப்பது முறை என்று எண்ணினோம்.
- 19
ஏனெனில் நம் மூதாதையர் பாரசீகத்திற்கு நாடு கடத்தப்பட்டபொழுது இறைப்பற்று உடையவர்களாய் அன்று விளங்கிய குருக்கள் பலிபீடத்தினின்று யாரும் அறியாதவாறு நெருப்பை எடுத்து, ஒரு பாழ்கிணற்றில் இருந்த பொந்து ஒன்றில் மறைத்துவைத்தார்கள்; அந்த இடம் எவருக்கும் தெரியாதவாறு பார்த்துக் கொண்டார்கள்.
- 20
பல ஆண்டுகள் கடந்தபின் கடவுள் விரும்பியபொழுது, பாரசீக மன்னரின் ஆணையோடு நெகேமியா, நெருப்பை ஒளித்துவைத்திருந்த குருக்களின் வழிமரபினரை அதைக் கொணரும்படி அனுப்பினார். அவர்கள் நெருப்புக்குப் பதிலாக ஒரு கெட்டியான நீர்மத்தையே கண்டதாக எங்களுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அதை எடுத்துவருமாறு அவர் கட்டளையிட்டார்.
- 21
விறகின் மேல் பலிப்பொருகள்கள் வைக்கப்படவே, அவற்றின்மீது அந்நீர்மத்தைத் தெளிக்கும்படி நெகேமியா குருக்களுக்குக் கட்டளையிட்டார்.
- 22
அவ்வாறே செய்யப்பட்டது. முன்னர் முகில்களால் மூடப்பட்டிருந்த கதிரவன் சிறிது நேரத்திற்குப்பின் ஒளிரத் தொடங்கினான். உடனே பெரும் நெருப்பு பற்றியெரிந்தது. அதனால் அனைவரும் வியப்படைந்தனர்!
- 23
பலிப்பொருள்கள் எரிந்து கொண்டிருந்த வேளையில் குருக்களும் மற்ற அனைவரும் வேண்டுதல் செய்தார்கள்; யோனத்தான் வழிநடத்த, நெகேமியாவைப்போல மற்றவர்களும் அதற்குப் பதிலுரைத்தார்கள்."
- 24
"அவ்வேண்டல் பின்வருமாறு; ' ஆண்டவரே, கடவுளாகிய ஆண்டவரே, அனைத்தையும் படைத்தவரே, நீர் அச்சத்துக்குரியவர், வல்லவர், நீதியுள்ளவர், இரக்கமுடையவர்; நீர் ஒருவரே அரசர், அருள்கூர்பவர்.
- 25
நீர் ஒருவரே வாரி வழங்குபவர், நீதியுள்ளவர், எல்லாம் வல்லவர், என்றும் உள்ளவர். நீரே இஸ்ரயேலை எல்லாத் தீமைகளினின்றும் விடுவிப்பவர். எங்கள் மூதாதையரைத் தெரிந்தெடுத்து உமக்கென்று உரித்தாக்கிக் கொண்டவரும் நீரே.
- 26
உம் மக்களான இஸ்ரயேலர் அனைவரின் பெயராலும் இப்பலியை ஏற்றுக்கொள்ளும்; உமது பங்கைப் பாதுகாத்து உமக்கென்று உரித்தாக்கிக் கொள்ளும்.
- 27
சிதறிக்கிடக்கும் எங்கள் மக்களை ஒன்றுசேரும்; பிற இனத்தார் நடுவே அடிமைகளாய் இருப்பவர்களுக்கு விடுதலை வழங்கும்; புறக்கணிக்கப்பட்டவர்களையும் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களையும் கனிவுடன் கண்ணோக்கும். நீரே எங்கள் கடவுள் எனப் பிற இனத்தார் அறிந்து கொள்ளட்டும்.
- 28
எங்களை ஒடுக்கிறவர்களையும் இறுமாப்புக் கொண்டு கொடுமைப்படுத்துகிறவர்களையும் தண்டியும்.
- 29
மோசே வாக்களித்ததுபோல் உமது தூய இடத்தில் உம் மக்களை உறுதிப்படுத்தும்."
- 30
"பின்பு குருக்கள் புகழ்ப்பா இசைத்தார்கள்.
- 31
பலிப் பொருள்கள் முற்றிலும் எரிந்தபின் எஞ்சியிருந்த நீர்மத்தைப் பெரிய கற்களின்மேல் ஊற்றும்படி நெகேமியா பணித்தார்.
- 32
அவ்வாறு செய்தபோது தீப்பிழம்பு கொழுந்துவிட்டெரிந்தது; ஆனால் பலி பீடத்திலிருந்து எழுந்து வந்த பேரொளியின்முன் அது மங்கிவிட்டது."
- 33
"இதுபற்றிய செய்தி எங்கும் பரவியது. நாடு கடத்தப்பட்ட குருக்கள் தீயை மறைத்துவைத்த இடத்தில் நீர்மம் காணப்பட்டதும், அதைக் கொண்டு நெகேமியாவும் அவரோடு இருந்தவர்களும் பலிப்பொருள்களை எரித்துத் தூய்மைப்படுத்தியதும் பாரசீக மன்னருக்கு அறிவிக்கப்பட்டது.
- 34
மன்னர் இதுபற்றிக் கேட்டறிந்தார்; அந்த இடத்தைச் சுற்றி அடைத்து அதைத் தூய இடமாக அமைத்தார்.
- 35
அங்கிருந்து கிடைத்த திரளான வருவாயிலிருந்து மன்னர் தாம் விரும்பியவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்குவார்.
- 36
நெகேமியாவும் அவரோடு இருந்தவர்களும் அந்த நீர்மத்தை"நெப்தார்"என்று அழைத்தார்கள். அதற்குத்"தூய்மைப்பாடு"என்பது பொருள். ஆனால்"நெப்தாய்"என்றே பலரும் அதை அழைக்கின்றனர்."
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.