CHAPTER
பாரூக்கு 4
- 1
ஞானமே கடவுளுடைய கட்டளைகள் அடங்கிய நூல்; என்றும் நிலைக்கக்கூடிய திருச்சட்டம். அதைக் கடைப்பிடிப்போர் அனைவரும் வாழ்வர்; அதைக் கைவிடுவோர் உயிரிழப்பர்.
- 2
யாக்கோபே, திரும்பி வா; ஞானத்தை ஏற்றுக்கொள்; அதன் ஒளியில் சீர்மையை நோக்கி நட,
- 3
உனது மாட்சியை மற்றவருக்கு விட்டுக்கொடாதே; உன் சிறப்புரிமைகளை வேற்று மக்களினத்தாரிடம் இழந்துவிடாதே.
- 4
இஸ்ரயேலே, நாம் பேறுபெற்றோர்; ஏனெனில் கடவுளுக்கு உகந்தது எது என்பதை நாம் அறிவோம்.
- 5
இஸ்ரயேலின் புகழை நிலைநாட்டும் என் மக்களே, வீறுகொள்வீர்.
- 6
நீங்கள் வேற்றினத்தாரிடம் விற்கப்பட்டது உங்கள் அழிவிற்காக அன்று; நீங்கள் கடவுளுக்குச் சினமூட்டியதால்தான் பகைவரிடம் ஒப்படைக்கப்பட்டீர்கள்.
- 7
கடவுளை விடுத்துப் பேய்களுக்குப் பலியிட்டதால் உங்களைப் படைத்தவருக்குச் சினமூட்டினீர்கள்.
- 8
உங்களைப் பேணிக் காத்துவந்த என்றுமுள கடவுளை மறந்தீர்கள்; உங்களை ஊட்டிவளர்த்த எருசலேமை வருத்தினீர்கள்;
- 9
கடவுளின் சினம் உங்கள்மீது வரக்கண்டு எருசலேம் கூறியது;"சீயோன் அண்டை நாட்டவரே, கேளுங்கள்; கடவுள் எனக்குப் பெருந்துயர் அனுப்பியுள்ளார்.
- 10
ஏனெனில் என்றுமுள்ளவர் என் புதல்வர், புதல்வியர் மீது சுமத்திய அடிமைத்தனத்தை நான் கண்டேன்.
- 11
மகிழ்ச்சியோடு நான் அவர்களைப் பேணி வளர்த்தேன்; ஆனால் அழுகையோடும் துயரத்தோடும் அனுப்பி வைத்தேன்.
- 12
நானோ கைம்பெண்; எல்லாராலும் கைவிடப்பட்டவள். என்பொருட்டு யாரும் மகிழ வேண்டாம்; என் மக்களின் பாவங்களை முன்னிட்டு நான் தனிமையில் விடப்பட்டுள்ளேன். ஏனெனில் அவர்கள் கடவுளின் சட்டத்தைவிட்டு விலகிச் சென்றார்கள்.
- 13
கடவுளுடைய நெறிமுறைகளை அவர்கள் அறிந்திலர்; அவருடைய கட்டளைகளின் வழியில் சென்றிலர்; நற்பயிற்சியின் நெறியில் அவர்தம் நீதியின்படி நடந்திலர்.
- 14
"சீயோனின் அண்டை நாட்டார் கூடிவரட்டும்; என் புதல்வர், புதல்வியர்மீது என்றுமுள்ளவர் சுமத்திய அடிமைத் தனத்தை எண்ணிப்பார்க்கட்டும்.
- 15
ஏனெனில் அவர்களுக்கு எதிராய்த் தொலையிலிருந்து ஒரு நாட்டையும் வேற்று மொழி பேசும் இரக்கமற்ற மக்களினத்தையும் கடவுள் கொண்டு வந்தார். அவர்கள் முதியோரை மதிக்கவில்லை. சிறுவர்களுக்கு இரக்கங் காட்டவில்லை.
- 16
கைம்பெண்ணின் அன்பு மைந்தர்களைக் கடத்திச் சென்றார்கள்; புதல்வியரிடமிருந்து அவளைப் பிரித்து, தனிமையில் விட்டுச் சென்றார்கள்.
- 17
"நானோ உங்களுக்கு எவ்வகையில் உதவ இயலும்?
- 18
இக்கேடுகளை உங்களுக்கு வருவித்தவரால்தான் உங்கள் பகைவரிடமிருந்து உங்களை விடுவிக்க இயலும்.
- 19
போங்கள், என் மக்களே, உங்கள் வழியே போங்கள். நான் கைவிடப்பட்டவள்.
- 20
அமைதிக்குரிய ஆடைகளைக் களைந்துவிட்டேன்; மன்றாட்டுக்குரிய சாக்கு உடை அணிந்துள்ளேன்; என்றுமுள்ளவரை நோக்கி என் வாழ்நாள் முழுவதும் கூக்குரலிடுவேன்.
- 21
"; என் பிள்ளைகளே, வீறுகொள்வீர்; கடவுளை நோக்கிக் கூக்குரலிடுவீர். பகைவரின் ஆற்றலினின்றும் கைவன்மையினின்றும் அவர் உங்களை விடுவிப்பார்.
- 22
என்றுமுள்ளவர் உங்களை மீட்பார் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. தூயவரிடமிருந்து எனக்கு மகிழ்ச்சி கிடைத்தது; ஏனெனில், என்றுமுள உங்கள் மீட்பர் விரைவில் உங்களுக்கு இரக்கங் காட்டுவார்.
- 23
நான் உங்களைத் துயரத்தோடும் அழுகையோடும் அனுப்பி வைத்தேன். கடவுளோ முடிவில்லா மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் உங்களை மீண்டும் என்னிடம் அழைத்து வருவார்.
- 24
உங்கள் அடிமைத்தனத்தை இப்பொழுது காண்பதுபோன்று உங்கள் கடவுளிடமிருந்து வரவிருக்கும் மீட்பையும் சீயோனின் அண்டை நாட்டார் விரைவில் காண்பர். அம்மீட்பு மிகுந்த மாட்சியோடும் என்றுமுள்ளவரின் போரொளியோடும் உங்களை வந்தடையும்.
- 25
என் மக்களே, கடவுளிடமிருந்து உங்கள் மீது வந்துற்ற சினத்தைப் பொறுமையோடு தாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் பகைவர் உங்களைத் துன்புறுத்தியுள்ளனர். ஆனால் அவர்களது அழிவை நீங்கள் விரைவில் காண்பீர்கள்; அவர்களை ஏறி மிதிப்பீர்கள்.
- 26
செல்லமாய் வளர்க்கப்பெற்ற என் மக்கள் கரடு முரடான பாதையில் நடந்தார்கள்; பகைவர் கவர்ந்து செல்லும் ஆட்டு மந்தைபோன்று அவர்கள் கடத்திச்செல்லப்பட்டார்கள்.
- 27
"என் மக்களே, வீறுகொள்வீர்; கடவுளை நோக்கிக் கூக்குரலிடுவீர். இத்துயரங்களை உங்கள்மீது அனுப்பி வைத்தவர் உங்களை நினைவுகூர்வார்.
- 28
கடவுளைவிட்டு அகன்று செல்வதில் முன்பு நீங்கள் முனைந்து நின்றீர்கள். அதைவிடப் பன்மடங்கு ஆர்வத்துடன் அவரைத் தேடும் பொருட்டு இப்பொழுது அவரிடம் திரும்பி வாருங்கள்.
- 29
ஏனெனில், இக்கேடுகளை உங்கள் மீது வரச்செய்தவரே உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் அருள்வார்."
- 30
எருசலேம், வீறுகொள். இப்பெயரைக் கொடுத்தவரே உனக்கு ஆறுதல் வழங்குவார்.
- 31
உன்னைத் துன்புறுத்தி உன் வீழ்ச்சி கண்டு மகிழ்ந்தோர் இரங்கத்தக்கவர்;
- 32
உன் மக்கள் அடிமைகளாய் இருந்த நகர்களும் இரங்கத்தக்கவை; உன் மைந்தர்களை அடிமைகளாய் ஏற்றுக்கொண்ட நகரும் இரங்குதற்குரியது.
- 33
உன் வீழ்ச்சி கண்டு அது மகிழ்ந்ததுபோல, உன் அழிவு கண்டு இன்புற்றது போல, தன் பாழ்; நிலை கண்டு அது பெருந்துயர் அடையும்.
- 34
அதனுடைய மக்கள்திரளில் அது கொண்ட இறுமாப்பை அகற்றிவிடுவேன்; அதன் செருக்கை அழுகையாய் மாற்றி விடுவேன்.
- 35
என்றுமுள்ளவரிடமிருந்து நீண்டநாள் அதன்மேல் நெருப்பு வந்து விழும்; பன்னெடுங் காலம் அது பேய்களின் இருப்பிடமாய் அமையும்.
- 36
எருசலேமே, கீழ்த்திசையை நோக்கு; கடவுளிடமிருந்து உனக்கு வரும் மகிழ்ச்சியைப் பார்.
- 37
உன்னை விட்டுப் பிரிந்துசென்ற உன் மைந்தர்கள் இதோ! திரும்பி வந்து கொண்டிருக்கின்றார்கள்; கீழ்த்திசைமுதல் மேற்றிசைவரை உள்ள எல்லா நாடுகளிலிருந்தும் தூயவரின் சொல்லால் ஒன்று சேர்க்கப்பட்டு, கடவுளின் மாட்சியில் திளைத்த வண்ணம் வந்துகொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.