அதிகாரம்
எஸ்தர் (கிரேக்கம்) 6
- 1
ஆண்டவர் அன்று இரவு மன்னருக்குத் தூக்கம் வராமலிருக்கச் செய்தார். ஆகவே குறிப்பேட்டைக் கொண்டு வந்து தமக்குப் படித்துக் காட்டுமாறு மன்னர் தம் செயலரைப் பணித்தார்.
- 2
காவற்பணியில் இருந்த இரண்டு அலுவலர்கள் அர்த்தக்; சஸ்தா மன்னரைக் கொல்லச் சூழ்ச்சி செய்தியிருந்தது பற்றி மொர்தெக்காய் மன்னரிடம் தெரிவித்தது தொடர்பான குறிப்புகள் அதில் எழுதியிருக்கக் கண்டார்.
- 3
உடனே மன்னர்,"இதற்காக மொர்தெக்காய்க்கு நாம் என்ன சிறப்பு அல்லது கைம்மாறு செய்தோம்?"என்று வினவினார்."அவருக்குத் தாங்கள் ஒன்றுமே செய்யவில்லை"என்று மன்னரின் பணியாளர்கள் மறுமொழி கூறினார்கள்.
- 4
மோர்தெக்காய் செய்திருந்த நற்பணி பற்றி மன்னர் விசாரித்துக் கொண்டிருந்தபோது ஆமான் அரண்மனை முற்றத்திற்குள் வந்தான்."முற்றத்தில் இருப்பவர் யார்?"என்று மன்னர் வினவினார். தான் ஏற்பாடு செய்திருந்த மரத்தில் மொர்தெக்காயைத் தூக்கிலிடுவதுபற்றிப் பேசுவதற்காக ஆமான் அப்போதுதான் உள்ளே வந்திருந்தான்.
- 5
"ஆமான்தான் முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார்"என்று பணியாளர்கள் மன்னரிடம் கூறினார்கள்."அவரை உள்ளே வரச்சொல்"என்று மன்னர் சொன்னார்.
- 6
பின் மன்னர்,"நான் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கு என்ன செய்யலாம்?"என்று ஆமானிடம்"கேட்டார்."என்னைத் தவிர வேறு யாரை மன்னர் பெருமைப் படுத்தப்போகிறார்"என்று ஆமான் தனக்குள் நினைத்துக் கொண்டான்.
- 7
ஏனவே அவன் மன்னரிடம்,"மன்னர் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கென,
- 8
மன்னர் அணியும் விலையுயர்ந்த மெல்லிய ஆடைகளையும், பயன்படுத்தும் குதிரையையும் பணியாளர்கள் கொண்டு வரட்டும்.
- 9
அந்த ஆடைகளை மன்னரின் மதிப்பிற்குரிய நண்பர் ஒருவரிடம் கொடுக்கட்டும். அவர் அவற்றை மன்னர் அன்புசெலுத்தும் அம்மனிதருக்கு அணிவிக்கட்டும். குதிரைமீது அவரை அமர்த்தி நகரின் தெருக்களில் வலம் வரச்செய்து,"மன்னர் பெருமைப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே செய்யப்பெறும்"என அறிவிக்கட்டும்"என்றான்.
- 10
அதற்கு மன்னர்,"சரியாகச் சொன்னீர். அரண்மனையில் பணிபுரியும் மொர்தெக்காய்க்கு அவ்வாறே செய்யும். நீர் சொன்னவற்றில் எதையும்விட்டுவிட வேண்டாம்"என்று ஆமானிடம் கூறினார்.
- 11
ஏனவே ஆமான் ஆடைகளையும் குதிரையையும் கொண்டுவந்தான்; ஆடைகளை மொர்தெக்காய்க்கு அணிவித்து, குதிரைமீது அவரை அமர்த்தினான்."மன்னர் பெருமைப்படுத்த விரும்பும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே செய்யப்பெறும்"என்று அறிவித்துக்கொண்டே நகரின் தெருக்களில் அவர் வலம் வரச்செய்தான்.
- 12
பு p ன் மொர்தெக்காய் அரண்மனைக்குத் திரும்பினார். ஆமானோ தன் தலையை மூடிக்கொண்டு துயரத்தோடு தன் வீட்டுக்கு விரைந்தான்.
- 13
தனக்கு நேர்ந்தவற்றையெல்லாம் ஆமான் தன் மனைவி சோசராவிடமும் நண்பர்களிடமும் தெரிவித்தான்."மொர்தெக்காய் யூத இனத்தைச் சார்ந்தவர் என்றால், அவருக்கு முன்பாக நீர் சிறுமைப்படும் நிலை தொடங்கி விட்டது என்றால், நீர் வீழ்ச்சி அடைவது உறுதி. அவரை எதிர்த்து வெல்ல உம்மால் முடியாது; ஏனெனில் என்றுமுள கடவுள் அவரோடு இருக்கிறார்"என்று அவர்கள் அவனிடம் கூறினார்கள்.
- 14
அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே அண்ணகர்கள் வந்து எஸ்தர் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு ஆமானை விரைவாக அழைத்துச் சென்றார்கள்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.