- 1
இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார்.
- 2
"ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்; காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?"என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள்.
- 3
அவர் மறுமொழியாக,"இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்.
- 4
பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது.
- 5
நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி"என்றார்.
- 6
இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி,
- 7
"நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்"என்றார். சிலோவாம் என்பதற்கு"அனுப்பப்பட்டவர்"என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.
- 8
அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும்,"இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?"என்று பேசிக்கொண்டனர்.
- 9
சிலர்,"அவரே"என்றனர்; வேறு சிலர்"அவரல்ல; அவரைப்போல் இவரும் இருக்கிறார்"என்றனர். ஆனால் பார்வை பெற்றவர்,"நான்தான் அவன்"என்றார்.
- 10
அவர்கள்,"உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?"என்று அவரிடம் கேட்டார்கள்.
- 11
அவர் அவர்களைப் பார்த்து,"இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி, என் கண்களில் பூசி,"சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைப் கழுவும்"என்றார். நானும் போய்க் கழுவினேன்; பார்வை கிடைத்தது"என்றார்.
- 12
"அவர் எங்கே?"என்று அவர்கள் கேட்டார்கள். பார்வை பெற்றவர்,"எனக்குத் தெரியாது"என்றார்.
- 13
முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டிவந்தார்கள்.
- 14
இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்தநாள் ஓர் ஓய்வுநாள்.
- 15
எனவே,"எப்படிப் பார்வை பெற்றாய்?"என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர்.
- 16
பரிசேயருள் சிலர்,"ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது"என்று பேசிக் கொண்டனர். ஆனால் வேறு சிலர்,"பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?"என்று கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது.
- 17
அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம்,"உனக்குப் பார்வை அளித்த அந்த"ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?"என்று மீண்டும் கேட்டனர்."அவர் ஓர் இறைவாக்கினர்"என்றார் பார்வை பெற்றவர்.
- 18
அவர் பார்வையற்றிருந்து இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை அவருடைய பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை யூதர்கள் நம்பவில்லை.
- 19
"பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என நீங்கள் கூறும் உங்கள் மகன் இவன்தானா? இப்போது இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது?"என்று கேட்டார்கள்.
- 20
அவருடைய பெற்றோர் மறுமொழியாக,"இவன் எங்களுடைய மகன்தான். இவன் பிறவிலேயே பார்வையற்றவன்தான்.
- 21
ஆனால் இப்போது எப்படி அவனுக்குக் கண் தெரிகிறது என்பதோ யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனிடமே கேளுங்கள். அவன் வயது வந்தவன் தானே! நடந்ததை அவனே சொல்லட்டும்"என்றனர்.
- 22
யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய பெற்றோர் இப்படிக் கூறினர். ஏனெனில் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளும் எவரையும் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கிவிடவேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தங்களிடையே உடன்பாடு செய்திருந்தார்கள்.
- 23
அதனால் அவருடைய பெற்றோர்,"அவன் வயதுவந்தவன் தானே! அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்"என்றனர்.
- 24
பார்வையற்றிருந்தவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு அவரிடம்,"உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து. இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்"என்றனர்.
- 25
பார்வை பெற்றவர் மறுமொழியாக,"அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்; நான் பார்வையற்றவனாய் இருந்தேன்; இப்போது பார்வை பெற்றுள்ளேன்"என்றார்.
- 26
அவர்கள் அவரிடம்,"அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?"என்று கேட்டார்கள்.
- 27
அவர் மறுமொழியாக,"ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. இப்போது மீண்டும் ஏன் கேட்க விரும்புகிறீர்கள்? ஒரு வேளை நீங்களும் அவருடைய சீடர்கள் ஆக விரும்புகிறீர்களோ?"என்று கேட்டார்.
- 28
அவர்கள் அவரைப் பழித்து,"நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள்.
- 29
மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும்; இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது"என்றார்கள்.
- 30
அதற்கு அவர்"இது வியப்பாய் இல்லையா? எனக்குப் பார்வை அளித்திருக்கிறார்; அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர் எனத் தெரியாது என்கிறீர்களே!
- 31
பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை; இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவி சாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும்.
- 32
பிறவிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே!
- 33
இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது"என்றார்.
- 34
அவர்கள் அவரைப் பார்த்து,"பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?"என்ற சொல்லி அவரை வெளியே தள்ளினர்.
- 35
யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது,"மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?"என்று கேட்டார்.
- 36
அவர் மறுமொழியாக,"ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்"என்றார்.
- 37
இயேசு அவரிடம்,"நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்"என்றார்.
- 38
அவர்,"ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன்"என்று கூறி அவரை வணங்கினார்.
- 39
அப்போது இயேசு,"தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்"என்றார்.
- 40
அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது,"நாங்களுமா பார்வையற்றோர்?"என்று கேட்டனர்.
- 41
இயேசு அவர்களிடம்,"நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் ' எங்களுக்குக் கண் தெரிகிறது"என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்"என்றார்.
தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம். உரை இந்தப் பக்கத்தில் உள்ளது.